தாராபுரம்: நிக்கர்வாலாக்களால் (ஆர்எஸ்எஸ்) தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது  என்று கூறிய ராகுல், சீனா என்ற வாத்தையே 56 இஞ்ச் மார்புகொண்ட பிரதமர் மோடி வாயில் இருந்து வரவில்லையே? ஏன் என  தாராபுரத்தில் தேர்தல் பிரசாரதின்போது  கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் ராகுல் காந்தி முதல்கட்டமாக 3 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கோவையில் பேசிய ராகுல், தமிழகம் தனக்கு குடும்பம் போன்றது என்று சூளுரைத்தவர், திருப்பூரில் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது,  ஏழைகளின் சக்தியை மத்திய அரசு உணராமல் உள்ளதாகவும் ஆனால் தற்போது அந்த சக்தியை உணர்த்தும் வகையில் விவசாயிகள் மோடியை வெளியே வர முடியாத அளவு செய்து இருப்பதாக, குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரோட்டில் நெசவாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல், நெசவாளர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றார்.

தொடர்ந்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல், நேற்று மாலை தாராபுரத்தில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, ஒரே நாடு, ஒரே மொழி என்கிற கொள்கையை முன்னெடுக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தமிழ் ஒரு மொழி இல்லையா? தமிழர்களுக்கு தனி கலாசாரம் இல்லையா? வங்க மக்கள் தனி மொழி பேசவில்லையா? வங்கத்துக்கு தனி கலாசாரம் இல்லையா? பஞ்சாபி ஒரு மொழி அல்லவா? வடகிழக்கு மாநிலங்களுக்கு என தனி மொழிகள் இல்லையா? அதனால்தான் ஒரே நாடு, ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது என்றார்.

அஸ்திவாரம் இல்லாமல் கூரை இருக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அஸ்திவாரம் இல்லாமல், சுவர்களையும் அகற்றிவிட்டு கூரை கட்டுவதாக கூறுகிறார் பிரமதர் மோடி. இந்த அறியாமையை அருகில் இருப்பவர்கள்கூட எடுத்துரைக்கத் தயங்குகின்றனர். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பது நாட்டின் அஸ்திவாரத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். தமிழகத்தையும், தமிழர் கலாச்சாரத்தையும் பிரதமர் அவமானப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் முன்னேறச் செய்தது. லட்சக்கணக்கானோர் வறுமையில் இருந்து மீண்டனர். ஆனால், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பையே உடைத்தார் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின. நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார் என்று குற்றம் சாட்டியதுடன்,  இந்தியாவின் 5 அல்லது 6 பணக்கார வணிகர்களுக்கு உதவவும், இந்தியாவின் உண்மையான பலத்தை அழிக்கவும் நம் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், தனது நண்பர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்தார் பிரதமர். ஆனால், எத்தனை ஏழைகளின் கடன் தொகையை அவர் தள்ளுபடி செய்தார் என்பதைக் கூற முடியுமா? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன உதவி செய்தார்?

கடந்த 3 மாதங்களாக நான் பிரதமரைக் கவனித்து வருகிறேன் நாட்டின் பிரதமருக்கு சீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியம் இல்லை என்பதை நீங்களே பார்த்தீர்கள். கடந்த 3 மாதங்களில் அவர் பேசியதை பாருங்கள், அவர் சீனா என்ற வார்த்தையை சொல்லவில்லை. சீனா இந்தியாவுக்குள் அமர்ந்திருக்கிறது. அதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது,  இந்திய பொருளாதாரம் பலவீனமாக  இருப்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் 5 அல்லது 6 பெரிய வணிகர்களை வலுப்படுத்தவும், இந்தியாவின் உண்மையான பலத்தை (தொழிலாளர்கள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள்) பலவீனப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா பார்த்து வருகிறது.. அதனால்தான், சீனா நம்மிடம் வாலாட்டுகிறது.

ஆனால், சீனா என்ற வாத்தையே 56 இஞ்ச் மார்புகொண்ட மோடி வாயில் இருந்து வரவில்லையே? பிரதமர் நரேந்திர மோடி செயல்பாடுகளால் இந்த நாட்டின் அஸ்திவாரம் அசைக்கப்படுவதற்கு, நாங்கள் விடமாட்டோம் என்று காட்டமாக கூறினார்.

மேலும், தமிழக அரசை மிரட்டி கட்டுப்படுத்த முடியும் என்று நரேந்திர மோடி நினைக்கிறார். இதன் மூலமாக, 7 கோடி தமிழக மக்களையும், கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அவருக்குப் புரியவில்லை.. தமிழக மக்கள்தான், மாநில எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். தமிழ் மக்களுடன் எனக்கு இருப்பது குடும்ப உறவு; இதனை ரத்த உறவாகவே கருதுகிறேன். நாக்பூரில் உள்ள நிக்கர்வாலாக்கள் (கால் சட்டைக்காரர்கள்) எந்த காலத்திலும், எப்போதும் தமிழக மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.