பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்: கொரோனா பரவலை தடுக்க நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

உதகை: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகையால் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மண்டலங்களுக்கு இடையேயான இ பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது மெல்லிடைத்தாள் உபயோகிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு ரூ.1,000அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் கடைக்கு முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான குறியீடுகளை அமைக்க வேண்டும். குறியீடுகளை அமைக்காத கடைகளை திறக்க அனுமதி இல்லை. மேலும் 144 தடை உத்தரவு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகளான மருத்துவ சிகிச்சை, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் இறப்பு தவிர வேறு தேவைகளுக்காக வெளியூர் பயணம் செல்லக்கூடாது. தேவையற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.