மிருகக் காட்சி சாலையில் துப்பாக்கி சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

சென்னையில் நெடுங்காலமாக மிருகங்களைக் காட்சி படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. மிருகக் காட்சி சாலை பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அவர்களது பொருளாதார சக்தியின் பிம்பமாக கருதப்பட்டது. எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் துவங்கப்பட்ட மிருகக் காட்சிசாலையை உயிர் காலேஜ் எனவும் அருங்காட்சியகத்தைச் செத்த காலேஜ் எனவும் அழைத்து வந்தனர் மதராஸ் மக்கள்.

மிருகக் காட்சி சாலை ரயில் நிலையம் அருகே இருந்த மக்கள் பூங்காவாக மாற்றப்பட்ட பிறகு மேலும் பல மிருகங்கள் அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டன. மக்கள் மிகவும் விரும்பிச் சென்ற பகுதிகளில் ஒன்றானது அவ்விடம்.

1940களில் உலகப் போரில் இந்தியாவும் கலந்து கொண்டது. சென்னைக்கு மிக அருகில் உள்ள நகரங்கள் தாக்கப்பட்டன. ஆகவே ஜப்பானியர்கள் குண்டு வீச்சுக்குப் பயந்து பலரும் சென்னையை விட்டு வெளியேறினார்கள்.

மற்றொரு பயமும் அப்போது நாட்டில் நிலவியது. ஒரு வேளை மிருகக்காட்சி சாலையில் ஜப்பானிய குண்டு வெடிப்பு ஏற்பட்டு, அதனால் மிருகங்கள் அங்கிருந்து வெளியேறி விடுமா? எனப் பலர் பயந்தனர்.

இந்தப் பயம் நியாயமானது தான்.

ஒரு முறை, பெர்லின் நகர மிருகக் காட்சி சாலையில் விமானம் மூலம் குண்டு வீசப்பட்டது. அங்கிருந்து மிருகங்கள் அனைத்தும் நகர வீதிகளில் உலவி மக்களை அச்சுறுத்தின.

இதை ஒட்டி அப்போதைய சென்னை அரசு மிருகக் காட்சி சாலையை நிர்வகித்து வந்த மாநகராட்சியிடம் விலங்குகள்ளினால் வரக்கூடிய அபாயத்தைக் கவனிக்க உத்தரவிட்டது. அதை அடுத்து, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை மேயர் மைசூர், ஐதராபாத், போபால் மற்றும் கல்கத்தா நகர மிருகக் காட்சிசாலை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், அந்த இடங்களில் உள்ள மிருகக் காட்சி சாலைகளும் நகர்ப்புறத்தில் அமைந்துள்ளதால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

மிருகங்களை ஏற்றுக்கொள்ள ஈரோடு நகராட்சி ஒப்புதல் அளித்தது, ஆனால் ரெயில்வே நிர்வாகம் 1942 ஆம் வருடம் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு பிறகே மிருகங்களை எடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவித்தது. அரசோ மிருகங்களை இங்கிருந்து அனுப்பக் கடைசி தினமாக ஏப்ரல் 11 ஆம் தேதியை முடிவு செய்திருந்தது. ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று மலபார் காவல்துறையின் துப்பாக்கி வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மிருகக்காட்சி சாலையில் மூன்று ஆண் சிங்கங்கள், ஆறு பெண் சிங்கங்கள், நான்கு புலிகள், எட்டு சிறுத்தைகள், நான்கு கரடிகள், ஒரு கரும் சிறுத்தை ஆகியவை ஒரு மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன. உலக நாடுகளில் எங்குமே இவ்வளவு குறைந்த நேரத்தில் இத்தனை மிருகங்கள் கொல்லப்பட்டது கிடையாது என்பதால் இது உலக ரிக்கார்ட் ஆனது.

யானைகளால் அபாயம் அதிகம் இருக்கும் என யாரும் கருதவில்லை. அதே நேரத்தில் யானை அளவில் மிகவும் பெரியது என்பதால் புதைக்க தேவையான ஆட்பலமும் இல்லை.

இந்தத் துப்பாக்கி சூட்டுக்கு ஒரு வாரம் முன்பு 3 சிங்கக் குட்டிகள் பிறந்திருந்தன. தற்செயலாக அவை மைசூர் மிருகக் காட்சி சாலைக்கும் கர்நாடகா கிராண்ட் சர்க்கசுக்கும் ரூ.450 விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் உயிர் தப்பின.

இரண்டு யானைகள், 2ஒட்டகச் சிவிங்கிகள், 3 வரிக்குதிரைகள், 5 பபூன் குரங்குகள் (இவை மிகவும் அரிதானவை
என்பதால் அவசியம் காப்பாற்றியாக வேண்டிய சூழ்நிலை இருந்தது) ஆகியவை ஈரோட்டுக்கு லாரிகள் மூலமும் ரெயில் மூலமும் எடுத்துச் செல்லப்பட்டன.

, இறந்த விலங்குகளில் மொத்த மதிப்பு ரூ.4568 எனக் கணக்கிடப்பட்டது. புலிகளின் மதிப்பு ரூ.475 எனவும் சிங்கங்களின் மதிப்பு ரூ.282 எனவும் கணக்கிடப்பட்டது.ஆனால் மிருகக் காட்சி சாலையின் இழப்பு என்பது கணக்கிட முடியாமல் இருந்தது.

1980 களில் மிருகக்காட்சி சாலை வண்டலூருக்கு மாற்றப்படும் வரை, பொலிவு இழந்தே காணப்பட்டுவந்தது.

-வெங்கடேஷ்