இரண்டாம் உலகப்போரில், பர்மா மற்றும் மலயாவை கைப்பற்றிய ஜப்பானின் அடுத்த இலக்கு சென்னையாகத்தான் இருக்கும் என அஞ்சப்பட்டது.
ஆனால் பிரிட்டிஷ் அரசோ இதை மறுத்தது. சென்னையைப் பாதுகாக்க எப்போதும் தயாராக உள்ளதாகப் நம்பிக்கை தெரிவித்த அரசை மக்களும் முழுமையாக முதலில் நம்பினர். ஜப்பானிய விமானங்களில் உள்ள எரிபொருளைக் கொண்டு சென்னை வரை பறக்க இயலாது என நம்பப்பட்டது. அப்படியே அவர்கள் சென்னை வரை வந்தாலும், மக்களைத் தப்பிக்க வைக்க வசதியாக இருட்டடிப்பு, புதை குழிகள், அபாய சங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.

ஆனால் மதராஸ் மக்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் பீதியிலும் தயார் நிலையிலும் இருந்து வந்தார்கள். அப்போது ஜப்பானிய விமானப் படைகள் கடலோர நகரங்களான கொலோம்போ, விசாகப்பட்டினம், காக்கிநாடா ஆகிய பகுதிகளில் குண்டு கொண்டு தாக்கியது மேலும் மக்களைப் பேரச்சத்தில் ஆழ்த்தியது. இத்தகைய தருணத்தில், அரசு மதராஸில் பாதுகாபில்லா இடங்களில் வாழும் மக்களை ஊரை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிட்டது. சென்னையின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஊரை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். அரசும் மக்களின் ஒத்துழைப்பால் சற்றே நிம்மதி அடைந்தது எனக் கூறலாம். மாட்டு வண்டிகளுக்கும் மோட்டார் கார்களுக்கும் தனிபாதைகள் அமைத்தன.
மக்கள் தங்களுடைய விலை மதிப்புள்ள பொருட்களை வழியில் பாதுகாப்பின்மை காரணமாக வீட்டிலேயே பத்திரப்படுத்தி செல்லத் திட்டமிட்டனர். தங்கள் உடைமைகளை பாதுகாக்க வீடுகளுக்குப் பூட்டு போடுவது அவசியமாகியது. நகரில் உள்ள பூட்டுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

அப்போது திண்டுக்கல்லில், பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்களால் தேவையான பூட்டுக்களை தயாரிக்க முடியவில்லை. அத்துடன் அதற்கான உலோகம் மற்றும் உதிரிப் பொருட்களும் இருப்பில் இல்லை. பூட்டுக்கள் கிடைக்காததால், பலர் சென்னையை விட்டுச் செல்வது தாமதமாகியது. அத்துடன் பூட்டுக்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. கருப்புச் சந்தையிலோ, பூட்டு விற்பனை அமோகமாக நடந்துவந்தது.இவ்வாறு விற்பவர்களுக்கு எங்கிருந்து பூட்டுக்கள் கிடைக்கிறது என்பது யாருக்கும் முதலில் விளங்காமல் இருந்தது.
இந்த கருப்புச் சந்தைக்கு பூட்டுக்களைத் சேகரித்து விற்க ஒரு பெரிய திருட்டுப் படையே இயங்கி வந்தது. அவர்கள், பூட்டி உள்ள வீடுகளுக்குச் சென்று கள்ளச்சாவி மூலம் பூட்டை திறந்து பிறகு அதற்கு புதிய சாவிகள் செய்து சந்தையில் விற்பனைக்கு வழங்கினார். விந்தையிலும் விந்தை…திறந்து கிடந்த வீடுகளை கண்டு கொள்ளாமல், திருடர்கள் பூட்டுக்களை மட்டுமே திருடத் தொடங்கினர்.


கருப்புச் சந்தையை முடக்குவதற்கு, காவல்துறையினர் பூட்டு திருடர்களில் 20 பேரைக் கைது செய்தனர்.
சில மாதங்களில் வீடு திரும்பிய மக்கள் தங்கள் வீடுகளில் பொருட்கள் அனைத்தும் பத்திரமாகவும், கதவுகளில் போடப்பட்ட பூட்டுக்கள் மட்டுமே திருடப்பட்ட நிலையையும் கண்டு வியந்தனர்.

-வெங்கடேஷ்