ஆசியாவின் முதல் விமானம், மதராச பட்டினத்தில் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

உலகில் உள்ள 121.4 கோடி விமானப் பயணிகளில், மூன்றில் ஒரு பகுதி பயணிகள் ஆசிய விமான நிறுவனங்களில் பயணிக்கின்றனர். ஆசியாவில் முதலில் ஆகாய விமானம் எங்குப் பறந்தது தெரியுமா?
ரைட் சகோதரர்கள் அமெரிக்காவில் விமானத்தைக் கண்டு பிடித்து 7 வருடங்கள் கழித்து ஒரு விமானம் அண்ணாசாலையில் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் வடிவமைக்கப்பட்டு பின்பு கூவம் நதியின் நடுவில் உள்ள ஒரு தீவில் ஆச்சிரியத்தில் உறைந்த மக்களின் முன்பு அரங்கேறியது இந்த நிகழ்வு. பரவைகள் மட்டுமே பரப்பதை கண்டறிந்த மதராஸ் மக்களின் வியப்பை அதிகப்படுத்தும் வகையில் அந்த விமானம் ஓட்டிக் காட்டப்பட்டது.

மாவீரன் நெப்போலியன் பிறந்த கார்சிகன் தீவைச் சேர்ந்தவர் கியாகோமோ டி அஞ்சலிஸ் என்னும் வெள்ளைக்காரர். மதராசிலேயே தங்கிவிட்ட இவர், 1906 முதல் மதராஸின் மிகச் சிறந்த ஓட்டலான ஓட்டல் டி அஞ்சலிஸ் என்னும் ஓட்டலை நடத்தி வந்தார். இது மதராஸில் முதல் முறையாக மின் தூக்கி, வெந்நீர் குழாய்கள், மின் விசிறிகள், இறக்குமதி செய்யப்பட்ட டைல்கள், ஐஸ் தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவை அமைந்துள்ள ஓட்டல் ஆகும்.

படம்: நடுவில் அமர்ந்திருப்பவர் கியாகோமோ டி அஞ்சலிஸ்

படம்: ஓட்டல் டி அஞ்சலிஸ்

ஐரோப்பிய பத்திரிகைகளில் வெளியான லூயிஸ் பிலிரியட் என்பவரின் ஆங்கில கால்வாயைக் கடந்த விமானப் படங்கள் மற்றும் தனது சொந்த வடிவமைப்பைக் கொண்டு இருவர் செல்லும் விமானத்தை டி அஞ்சலிஸ் உருவாக்கினார். க்ரீன் என்ற ஒரு தலைசிறந்த பொறியாளர் இந்த விமானத்தின் எந்திரத்தை உருவாக்கினார். அந்தப் பொறியாளர் இந்தியாவில் நீராவி மூலம் செலுத்தப்பட்ட முதல் காரின் வடிவமைப்பாளரும் ஆவார்.

படம்: ஆசியாவின் முதல் விமானம்.

விமானத்தை மாட்டு வண்டி மூலம் பல்லாவரம் எடுத்துச் சென்று டி அஞ்சலிஸ் சோதனை ஓட்டம் நடத்தினார். 1910 ஆம் வருடம் மார்ச் மாதம் இந்த விமானம் பொதுமக்கள் முன் பறக்கவிட்டதை உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. டி அஞ்சலிஸ் இந்த விமான ஓட்டத்தைப் பார்க்க வரும் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலித்தார். அது மட்டுமின்றி, மக்கள் தீவுத் திடலிலிருந்து தன்னுடன் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம் எனவும் விளம்பரம் செய்திருந்தார். அதை ஏற்று வாசன் என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் தைரியமாக விமானத்தில் பயணம் செய்தார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் வாசனைப் பயம் கொள்ள முயிற்சித்தாலும், அவர் விமானத்தில் தைரியமாக ஏறினார். தீவுத் திடலில் இருந்து மேலேறிய இந்த விமானம் கடல் மேல் பறந்து, பின்பு மீண்டும் தீவுத் திடலுக்கு வந்து பத்திரமாக கரை இறங்கியது.
வாசன் மகாகவி பாரதிக்கு மிகவும் அறிமுகமானவர். சுப்ரமணிய பாரதி தனது இந்தியா பத்திரிகையில் இந்த விமானத்தை “பிரிட்டிஷ் நிறுவனத்தில் தமிழ் தொழிலாளர் உருவாக்கிய விமானம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

-வெங்கடேஷ்

கார்ட்டூன் கேலரி