1940 களில் தமிழக அரசியல்வாதிகள் திரைப்படம் மூலம் பல அரசியல் கருத்துக்களை புகுத்த முடியும் என்பதை உணர்ந்தனர். திராவிட கட்சிகளே திரையின் வாயிலாக பெரிதும் பலனடைந்தனர்.

1952 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடான “பராசக்தி” தமிழ் திரைப்படம் சமுதாய அவலங்களை பெரிதும் விமர்சித்திருந்தது. படத்தின் பெயருக்கு நேர்மாறாக இந்த படம் ஆன்மிகத்துக்கு எதிராக அமைந்த்தது விந்தையே. குடும்பக் கதைகள், சரித்திரக் கதைகள், புராணக் கதைகள் மட்டுமே படமாக்கப்பட்டு வந்த காலத்தில், “பராசக்தி”… தமிழ் திரைப்பட உலகின் போக்கையே மாற்றி, ஒரு புதிய பாதையை அமைத்தது.

சமுதாய அமைப்பில், நீதித் துறையில் மற்றும் சாதி அமைப்புகளில் சீர்கேடுகள் தாக்கப்பட்டன.
மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் போன்றவற்றை இந்த திரைப்படம் மிகவும் விமர்சித்திருந்தது. அத்துடன் தலைப்புப் பாடலான (டைட்டில் சாங்) பாரதிதாசன் பாடல் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக திராவிட நாடு அமைப்பது குறித்திருந்தது.

கருணாநிதியின் கூர்மையான வசனங்களும் சிவாஜி கனேசனின் வசன உச்சரிப்புகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் தயாரிப்பாளர் ஏ வி எம் அவர்களுக்கு புகழும் பொருளும் குவிந்தன. அதே நேரத்தில் திரைப்படங்களில் அரசியலை இணைக்க முடியும் என்பது பராசக்தி திரைப்பட வெற்றியின் மூலம் பலருக்கும் விளங்கியது. அதன் பிறகு அரசியல் கலந்த திரைப்படங்கள் பல வெளியாகின. சுப்ரமணிய பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரது பாடல்களும் பராசக்தி படத்தில் இடம் பெற்றிருந்தன.

பராசக்தி திரைப்படத்தின் கதை இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட பாதிப்பினால் பிரிந்து போன ஒரு தமிழ் குடும்பத்தை பற்றியது. பல வருட போராட்டங்களுக்கு பிறகு சிவாஜிகணேசன் கதாநாயகனாகி தனது முதல் வசனமான ‘சக்சஸ்’ என்னும் வசனத்தை இந்த படத்தில் கூறியிருப்பார். அப்போது அவருக்கு மாத ஊதியம் ரூ.250 அளிக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் ஒரு நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்ததைக் கண்ட இந்த படத்தின் துணை தயாரிப்பாளர் பெருமாள், அவரை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்தார். மற்றொரு தயாரிப்பாளரான ஏவி மெய்யப்பனுக்கு பெண் வேடம் அணிந்த நாடக நடிகரால் இவ்வளவு பெரிய படத்தின் கதாநாயகனாக நடிக்க முடியுமா என்பதில் ஐயம் இருந்தது. கணேசனின் ஒல்லியான உருவம் மற்றும் மிகவும் சாதாரண தோற்றம் ஆகியவைகளைக் கண்ட மெய்யப்பன் இவரை பாதி படத்தில் நீக்க எண்ணம் கொண்டார்.பெருமாள் அவ்வாறு செய்ய வேண்டாம் என மெய்யப்பனை வேண்டிக் கொண்டதால் செய்யவில்லை.

இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி கணேசனுக்கு பல அவமானங்கள் ஏற்பட்டுள்ளன. சிவாஜி ஒரு முறை, “ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மரங்கள் செட்டியார் ஊற்றிய தண்ணீரால் மட்டும் வளரவில்லை. எனது கண்ணீராலும் வளர்ந்தது” என தான் பட்ட துயரத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி படம் வெளியானதும் பலவகை எதிர்ப்புகளுக்கு உள்ளானது. இந்த படம் தடை செய்யப்படும் என வதந்திகள் பரவின. ஆனால் அதை எல்லாம் மீறி 175 நாட்கள் ஓடிய பராசக்தி திரைப்படம் வெள்ளிவிழா கண்டது.

இதனால் சிவாஜிகணேசன் புகழ் பெற்ற நட்சத்திரமானார். கருணாநிதியின் வசனங்கள் கிராமபோன் (இசைத்தட்டுக்களாக) வெளிவந்து அமோக விற்பனையைக் கண்டது.

பராசக்தி படத்தில் நீதிமன்ற காட்சிகளில் மூச்சு விடாமல் பேசும் வசனங்களை,
சிவாஜியின் ரசிகர்கள் அவருடைய மிகச் சிறந்த காட்சி என இன்றும் புகழ்ந்து வருகின்றனர்.

-வெங்கடேஷ்