எல் ஐ சி கட்டிடம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

மவுண்ட் ரோடில் கூவம் நதிக்கரை அருகே ஐந்து ஏக்கர் நிலமிருந்தது. அவ்விடத்தில் ஒரு தையல் கலைஞர், ஒரு பதிப்பாளர், ஒரு சலவையகம், மற்றும் ஒரு ஏலக்கடைக்காரர் என பலரும் அடுத்தடுத்து இருந்து வந்தனர்.
சென்னையில் அந்த இடத்தில் தான் முதல் முறையாகக் குழாய் நீரும் மின்சாரமும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


.இந்த இடத்தில் 1951 ஆம் வருடம் புகழ்பெற்ற தொழிலதிபரான எம் சிடி எம் சிதம்பரம் செட்டியார் நுழைந்தார். அப்போது 40 வயதான அவர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம், ரேயான் தொழிற்சாலை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை கொண்ட சாம்ராஜ்ஜியமே இருந்தது.
அந்த அலுவலகங்களுக்குத் தலைமையகமாக பழம்பெரும் சாலையில் இந்தியாவின் உயரமான கட்டிடத்தைக் கட்ட திட்டமிட்டார். அந்த கட்டிடத்தைக் கட்ட 25000 சதுர அடி (அதாவது கால்பந்து மைதானத்தில் பாதி) பரப்பில் கண்ணாடி, 1000 டன் இரும்பு மற்றும் 3000 டன் சிமிண்ட் தேவைப்படும்  என்று திட்டமிட்டார்.


இந்தியாவின் மிக உயரமான அந்த கட்டிடம் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு யுனைடெட் இந்தியா பில்டிங் என பெயரிடப்பட்டது.
எனினும், இந்த கட்டிடம் தான் நினைத்ததையே சாதித்தது. இந்த கட்டிடத்தின் பெயர், தளங்களின் எண்ணிக்கை, கட்டிடக் கலைஞர், வடிவமைப்பாளர் ஆகிய அனைத்தும் ஆரம்பத்தில் ஒன்றாகவும் இறுதியில் வேறாகவும் இருந்தது.
1953  ல் லண்டனைச் சேர்ந்த வடிவமைப்பாளர்கள் எச் ஜே பிரவுன் மற்றும் எல் சி மௌலின் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினர். பின் கட்டிட வேலைகள் நடைபெறும்போது சிங்கப்பூர் சிட்னி இடையே செல்லும் விமானம் விபத்துக்குள்ளானதில், சிதம்பரம் செட்டியார் மரணம் அடைந்தார்.


அதைத் தொடர்ந்து 1956 ஆம் வருடம் இன்சூரன்ஸ் வர்த்தகம் தேசிய மயமாக்கப்பட்டதால் இந்த கட்டிடத்தைக் கட்டும் பணியை அரசு ஏற்றுக் கொண்டது. இந்த கட்டிடத்தின் உயரம் 14 மாடிகளாகக் குறைக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு, இந்த கட்டிடத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் பில்டிங் என பெயர் சூட்டப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.


அனைத்து துரதிர்ஷ்டங்களையும் கடந்து நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த 177 அடி கட்டிடம் அதன் கண்ணாடிச் சுவர்களுடன் பலரையும் கவர்ந்தது. 1959 ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்ட இந்த எல் ஐ சி கட்டிடம் இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடம் என்னும்
பெருமையை இரு வருடங்கள் மட்டுமே பெற்றிருந்தது. அதன் பிறகு மும்பையில் கட்டப்பட்ட உஷா கிரண் பில்டிங் அந்த பெருமையைத் தட்டிப் பறித்தது. சென்னையின் உயரமான கட்டிடம் என்னும் பெருமையை இந்த கட்டிடம் 35  வருடங்களுக்குப் பெற்றிருந்தது.
எல் ஐ சி கட்டிடம் சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்தது. (திரைப்படங்களில் நடிகர்/நடிகை சென்னை வந்ததாகக் காட்ட இந்த கட்டிடத்தைக் காட்டுவது வெகு நாள் வழக்கமாக இருந்தது.)
1975 ஆம் வருடம் ஜுலை மாதம் இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தீ விபத்து அருகிலிருந்த கூவம் நதி நீரைக் கொண்டு அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

-வெங்கடேஷ்

கார்ட்டூன் கேலரி