ஓட்டை அனா வந்த கதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1943 ல், உலகப்போர் நடந்து வந்த காலம், உலோகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இருந்தது. போருக்குப் பயன்படும் அனைத்து சாலை வழி, வான் வழி மற்றும் நீர் வழி பொருட்களுக்குச் செம்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தொலைத்தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடியோவிலும் அதிக அளவில் செம்பு கம்பிகள் உபயோகப்படுத்தப்பட்டிருந்தன.ஆயுதங்கள் பித்தளையாலும் மற்றும் துப்பாக்கி குண்டுகளின் மேலுள்ள உறை செம்பினாலும் செய்யப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் போர்க்காலம் என்பதால் சுரங்கப் பணிகளும் உலோகத் தாதுகளை எடுத்துச் செல்லும் பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உலோகங்களின் விலை வானை எட்டியது ஒரு இந்திய நாணயத்தில் உள்ள உலோகத்தின் மதிப்பு நாணய மதிப்பைவிட அதிகமானதால் மதராஸ் மக்கள் அனைவரும் அந்த நாணயத்தை செலவழிக்காமல் பத்திரப்படுத்த ஆரம்பித்தனர்.


உலோகங்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் நாணயங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு சில்லறை வர்த்தகம் மிகவும் பதிக்கப்பட்டது.

உணவு விடுதிகளுக்கு வரும் மக்கள் வாசலிலேயே நிறுத்தப்பட்டு போதுமான சில்லறை உள்ளதா என கேட்கப்பட்டனர். அத்துடன் சில்லறைகளுக்குப் பதிலாக அதே மதிப்புள்ள தபால் தலைகளை மக்கள் அளித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. அரசு சில்லறை நாணயங்கள் வழங்கும் நிலையங்களைத் திறக்க முடிவு செய்தது. அத்துடன் போர்க்கால சட்டத்தின்படி நாணயங்களை அதன் மதிப்பை விட அதிக விலைக்கு விற்பது குற்றமாக்கப்பட்டது.

அரசு, நாணயங்களைப் பதுக்கி வைத்திருப்போர் குறித்து தகவல் அளிப்போருக்குப் பரிசுகள் வழங்கியது. அத்துடன் அவ்வாறு பதுக்கி வைப்போருக்குத் தண்டனைகளும் வழங்கப்பட்டது. புதிய சட்டத்தின்படி உணவு விடுதிகள் மற்றும் சில்லறை வர்த்தகர்களிடம் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. சென்னை உணவு விடுதிகளில் பல இடங்களில் இந்த சோதனைகளில் சில்லறை நாணயங்கள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் மைசூர் கஃபே ஓட்டலில் துணை காசாளர் ஜி. ராமகிருஷ்ண ராவ் இந்த போர்க்கால சட்டத்தின் படி கைது செய்யப்பட்டார்.
அரசின் இந்த சோதனைகளால் அதிர்ந்து போன உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் சங்கத் தலைவர் இராமநாத ஐயர் தலைமையில் ஒரு குழு அமைத்து சென்னை காவல்துறை துணை ஆணையர் ஓ எல் புரேல்லை சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அவர்கள் தொழிலுக்குச் சில்லறை நாணயங்களை இருப்பில் வைத்திருப்பது அவசியம் என்பதை எடுத்துரைத்தனர். அத்துடன் சோதனையில் பிடிபட்டது மிகவும் மதிப்பு குறைந்த
நாணயங்கள் என்பதால் உணவு விடுதிகளில் சோதனையை முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


இறுதியாக அரசு இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டது. பழைய நாணயங்களுக்குப் பதிலாகப் பாதி எடையில் புதிய நாணயங்கள் வெளியிடத் திட்டமிட்டது. எடை குறைப்புக்காக, நாணயங்களின் நடுவில் ஒரு துளை இடுவதே அந்த திட்டம். இவ்வாறு எடை குறைந்த புதிய மெல்லிய நாணயங்கள் 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
போர் முடிந்ததும் உலோகங்கள் விலை வெகுவாக குறைந்ததால், சில்லறை தட்டுப்பாடு அகன்றது.

-வெங்கடேஷ்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: உலகப்போர், உலோகங்கள், ஓ எல் புரேல், ஓட்டை அனா வந்த கதை, சில்லறை தட்டுப்பாடு, திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை, துப்பாக்கி குண்டு, நாணயங்கள், நினைவு மட்டுமே நிரந்தரம்
-=-