Random image

பாரதியின் கவிதைகள் நாட்டுடைமை ஆனது எப்படி? – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

“சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பது வசனம் மட்டுமல்ல. சுப்பிரமணிய பாரதியின் அருமையான கவிதைகள் அவருக்கு உணவளிக்கவில்லை. ஆனால், அவருடைய தேசபக்தி பாடல்களை மக்கள்  பாடும் போது அது பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு பெரிய எதிர்ப்பலையாக விளங்கியது.

தமிழ் வரலாற்றில் ஒவ்வொரு சமயத்திலும், பல கவிஞர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் பாரதி தனித்தன்மை வாய்ந்தவர். சொல்லமுடியாத அளவு வறுமையில் வாழ்ந்தவர். அத்தகைய ஒருவருடைய கவிதைகள் அனைவரையும் எவ்வாறு சென்றடைந்தது? பாரதியின் கவிதைகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது  சரித்திரம் வாய்ந்து. பெருமைப்பட வேண்டுமென்பது என்னவென்றால், அவருடைய படைப்புக்களே முதலில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மகாத்மா காந்திக்கும், ரவீந்திரநாத் தாகூருக்கும் முன்னால். பாரதியின் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்குவது அவ்வளவு எளிதாக அமையவில்லை. மாநிலத்தின் நான்கு தலைவர்களின் ஐந்து வருடக் கடின உழைப்பினால் இது சாத்தியமானது.

பாரதியின் மகள் சகுந்தலாவின் திருமண செலவுக்காக அவர் குடும்பத்தினர் பாரதியின் பாடல்களின் உரிமையை வெறும் ரூ.400க்கு விற்று விட்டனர். அந்த உரிமை நகைக் கடை உரிமையாளரான சூரஜ்மலிடம் இருந்தது. அவர்கள் அந்த பாடல்களை கிராமபோன் ரிகார்டாக
உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தனர். அவர்களிடமிருந்து வெகு நேரம் பேரம் பேசி  பாடல்களின் உரிமையை ஏவி மெய்யப்ப செட்டியார் ரூ. 9500க்கு வாங்கினார்.

ஏவி எம் யின் “நாம் இருவர்” படத்தில் பாரதியின் பாடல் ஒன்று இடம்பெற்று மிகவும் புகழடைந்தது. மேலும், இந்த பாடலுக்கு, குமாரி கமலாவை நடனமாட வைத்தது ஒரு தனிச் சிறப்பு.

ஏவி மெய்யப்ப செட்டியார்

அதே சமயம், ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. டிகேஎஸ் சகோதரர்கள் பாரதியின் கவிதைகளை தங்கள் நாடகத்துக்குப் பயன்படுத்துவது வழக்கம். அவர்கள் பில்கணன் என்னும் படத்தைத் தயாரிக்க முடிவு செய்த போது கண்ணனைக் குறித்த பாரதியின் கவிதைகளை தங்கள் திரைப்படத்தில் உபயோகிக்க முற்பட்டனர். வழக்கமாக நாடகத்தில் பாரதியார் பாடல்களைப் பாடுவதைப் பொறுத்துக் கொண்ட ஏவி எம் இப்போது மிகவும் கோபம் அடைந்தார். அவர் உடனடியாக அந்த பாடல்களுக்கான காப்புரிமை தன்னிடம் உள்ளதாக நோட்டிஸ் அனுப்பினார்.

டிகேஎஸ் சகோதரர்கள்

இது மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பாரதியை விடுவிக்கும் இயக்கம் என்னும் குழு கூடி பாரதியார் பாடலை தேசியமயமாக்க வலியுறுத்தியது. டிகே சண்முகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு அந்த உரிமையை வாங்க நடவடிக்கை எடுத்தது. அப்போதைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஏவி எம் செட்டியார் முதலில் தனது தங்கச்சுரங்கத்தை விட்டுக் கொடுக்க சம்மதிக்காவிட்டாலும் மாநில முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் தலையீட்டால் பாரதியின் பாடல்களை நாட்டுடைமையாக்க ஒப்புக் கொண்டார். தமிழினத்துக்குத் தானமாக அந்த உரிமையை விட்டுக்கொடுத்தார். சட்டப்பேரவையில் 1949 ஆம் வருடம் மார்ச் 12 ஆம் தேதி அன்று பாரதியார் பாடல்களின் உரிமையை அரசு பெற்ற செய்தி அறிவிக்கப்பட்டது.

பாரதியின் மனைவி செல்லம்மாள் மற்றும் மகள்கள் தங்கம்மாள், சகுந்தலா ஆகியோருக்கு சட்டப்படி இந்த பாடல்கள் மீது எவ்வித உரிமையும் இல்லை. ஆயினும், அவர்களை வெறும் கையுடன் அனுப்ப அரசு விரும்பவில்லை. அவர்களிடம் இருந்து ஒப்புதல் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட மதராஸ் அரசு அதற்காக அவர்களுக்கு தலா ரூ.5000 அளித்தது. பாரதியார் உயிருடன் இருந்தபோது உதவ வழி இல்லாத போதிலும், மரணத்துக்குப் பிறகுத் தனது குடும்பத்துக்கு உதவியுள்ளார் என்று பலர் கருதினர்.

பாரதியின் குடும்பம்

-வெங்கடேஷ்