ஒரு நாட்டின் சரித்திரத்துக்குச் சிலர் உதவுவார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே நாட்டின் புவியியலையே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். மயிலாப்பூரில் 58 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மறைந்த பொட்டி ஸ்ரீராமுலு, அது போல் ஒரு தியாகியே ஆவார்.

மதராஸ் மாகாணத்தில் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒரியா பேசுபவர்களும் இருந்தனர். ஆனால் மொழி வாரி பேரினவாதம் மக்களின் தலைக்கு மேல் ஏறி அமர்ந்த நேரம் வந்தது. இதில் மொழிப் போரில் அதிகம் ஈடுபட்டவர்கள் தெலுங்கர்கள் ஆவார்கள்.

மதராஸ் மாகாணத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை ஒன்று திரட்ட ஆந்திர மகாசபை பெரிதும் உழைத்தது. செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதுமே, கட்சி பாகுபாடுகளையும் மறந்து தெலுங்கு அரசியல்வாதிகள் டில்லியை நோக்கி எதிர்ப்பு பயணம் மேற்கொண்டனர். தெலுங்கு பேசும் மக்கள் மதராஸ் அவர்களுடையது எனக் கோரினார்கள். கடைசியாக கூவம் நதியை வைத்து மதராசை பிரித்து நதிக்கு வடக்கு பகுதி ஆந்திராவுக்கு எனவும் தெற்கு பகுதி தமிழ்நாட்டுக்கு எனவும் பிரிக்க விரும்பினர்.

ஏற்கனவே 564 ராஜ்ஜியமாக இருந்த நாட்டை ஒன்றாக்கிய நேரத்தில் இவ்வாறு ஒரு கோரிக்கை எழுந்ததால் நேரு, “மொழி வாரியான பிரிவினை விரும்பம் தகுந்தது தான். ஆயினும், அதற்கு இது சரியான நேரம் இல்லை. சரியான நேரம் வரும் போது அவர்கள் கோரிக்கையை அவசியம் நாம் பரிசீலிப்போம்”எனக் கூறினார்.

நேரு, படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா அடங்கிய கூட்டுக்குழு மொழி வாரி மாகாணங்கள் அமைப்பதை 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போடலாம் என ஆலோசனை அளித்தது.

அப்போது ஒரு சத்தியாகிரகி இந்திய அரசுக்கு எதிராகப்போராட முடிவு செய்தார். அவர் மதராஸில் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிந்த பொட்டி ஸ்ரீராமுலு ஆவார். அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் அடுத்தடுத்து பறி கொடுத்திருந்த சோகத்தில், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார்.

காந்தியின் முறைகளில் மிகவும் நம்பிக்கை உள்ளவர் பொட்டி. அவர் 1946 ல் ஆலயங்களுக்கு ஹரிஜனங்களை அனுமதிக்க நடத்திய உண்ணா நோன்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஹரிஜன ஆதரவு உண்ணா நோன்பினால் சுதந்திரப் போராட்டத்திலிருந்து ஆந்திர மக்கள் கவனம் திசை திரும்பியதால் காந்தி அவரை வற்புறுத்தி உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்தார்.

நேருவின் “பிறகு பரிசீலிப்போம்” என்ற பதிலால் மனமுடைந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952 ல் அக்டோபர் மாதம் மைலாப்பூர் ( இப்போது வித்யாமந்திர் பள்ளி அருகிலிருக்கும்) புலுசு சாம்பமூர்த்தி இல்லத்தில் தனது உண்ணா நோன்பைத் தொடங்கினார். இந்த உண்ணா நோன்புக்கு ஆதரவளிப்போர் நேரு மற்றும் ராஜாஜி மீதான எதிர்ப்பு கோஷங்களுடன் ரயில்களை நிறுத்திப் போராடினார்கள்.

நேரு, பொட்டி ஸ்ரீராமுலுவின் செய்கைக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவிரும்பவில்லை. பொட்டி ஸ்ரீராமுலு உடலால் மிகவும் பலவீனம் அடைந்த போதிலும் தனது உண்ணா நோன்பை விட மறுத்தார். உண்ணா நோன்பின் 56 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்ற அவருடைய உயிர் விரைவில் உடலை விட்டு நீங்கியது.

இந்த செய்தி அறிந்த பாடகர் கண்டசாலா அந்த இடத்துக்கு விரைந்து அவருடைய புகழுக்காக ஒரு அஞ்சலி கீதத்தை இயற்றி பாடினார்.

ஸ்ரீராமுலுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு கோஷங்களை எழுப்பினார்கள். ஊர்வலத்தின் பாதி வழியில் ஆத்திரமடைந்த தெலுங்கு மக்கள் வன்முறையைத் தொடங்கினர். இந்த செய்தி மதராஸ் மற்றும் ஆந்திரா பகுதிகளில் காட்டுத் தீ போலப் பரவியது. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ரயில்கள் மறிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கி சூட்டில் பலர் மரணம் அடைந்தனர்.

தனது பிடிவாதத்தைத் தளர்த்தி ஆந்திரா என ஒரு மாநிலம் உருவாகும் என நேரு அறிவித்தார். ஸ்ரீராமுலுவின் மரணமும் அதன் பின் விளைவுகளும் இந்தியாவின் வரைபடமானது மொழிகள் என்னும் கோடுகள் மூலம் பிரிக்கப்பட்டு புதியதாக வரைய வைத்தது.

-வெங்கடேஷ்