மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1949 ல் அதுவும் மாட்டு வண்டி போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மதராஸில் ஒரு கல்லூரி இந்தியாவில் முதல் முறையாக விமானத்துறை, ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு உள்ளிட்ட பொறியியல் படிப்புக்களை மாணவர்களுக்கு அளித்து வந்தது. தோல் தொழிற்சாலைகள் அதிகம் இருந்த குரோம்பேட்டையில் 27 ஏக்கரில் அது அமைக்கப்பட்டிருந்தது.

சுவாமிமலையில் ஒரு பிராமணராகப் பிறந்து தோல் தொழிலை மேற்கொண்ட சின்னசாமி ராஜம் இந்த கல்லூரியை அமைத்தார். அவர் ஸ்டீல் மற்றும் மின்சார துறையில் புகழ்பெற்ற மாபெரும் தொழிலதிபராக ஆனார். ராஜம் எட்வர்ட்ஸ் எல்லியட்ஸ் ரோட்டில் ஒரு அரண்மனை போன்ற வீட்டைக் கட்டினார். (பின்னர் அது சிவகங்கை அரசர் மற்றும் எஸ் எஸ் வாசனுக்கு உரியதானது.) அதன் பெயர் இந்தியா ஹவுஸ் ஆகும்.

சின்னசாமி ராஜம்
சின்னசாமி ராஜம்

ராஜம் நாகபட்டினத்தில் உள்ள தனது ஸ்டீல் ஆலையில் பணி புரிய ஜெர்மன் பொறியாளர்களை அமர்த்திய போது இந்தியாவில் திறமையான தொழில்நுட்ப பொறியாளர்கள் பஞ்சம் உள்ளதை உணர்ந்தார். அது அவருக்கு ஒரு கல்லூரியைத் தொடங்கும் எண்ணத்தை மனதில் ஒளிர
வைத்தது.

அடுத்தடுத்து அவர் மகனும் மனைவியும் மரணம் அடைந்ததால் அவர் சற்றே தளர்வற்ற நிலைக்குச் சென்ற போதும் அவருக்குள் இருந்த அந்த இந்தியர்களைத் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மறையவில்லை. கல்லூரியைத் தொடங்க தேவையான நிதிக்காக அவர் தனது இல்லத்தை ரூ.5 லட்சத்துக்கு விற்று விட்டு வாடகை வீட்டுக்குக் குடி புகுந்தார்.

கல்லூரியின் தொடக்க விழா 1949 ஆம் வருடம் நடந்தது. அப்போதைய மதராஸ் மாகாண முதல்வர் குமாரசாமி ராஜா திறப்பு விழாவை நடத்தினார்.

நாடெங்கும் இருந்து வந்த 96 மாணவர்களுடன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியின் ஆற்றலை அறிந்த பலர் இதற்கு ஆதரவு அளித்தனர். ஜிடி நாயுடு தனது தொழிற்சாலைகளில் அனைத்து மாணவர்களுக்கு உள் பயிற்சியளித்தார். பிர்லா குடும்பம் இரு விடுதிகளைக் கட்டி தந்தது.கல்லூரி நிதிக்காக எம் எஸ் சுப்புலட்சுமி இலவசமாகக் கச்சேரி நடத்தினார்.


ஆரம்பக் காலத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் விஞ்ஞான செய்முறை வகுப்புக்கள் தாம்பரத்தில் அமைந்துள்ள சென்னை கிறித்துவ கல்லூரியில் நடந்தது. அந்த கல்லூரி மாணவர்கள் வருவதற்கு முன்பு காலை 6 முதல் 9 மணி வரை இவ்வகுப்புக்கள் நடந்தன.
கஷ்டங்களைத் தாண்டி கல்லூரி அமைப்பாளர் ஆசைப்படி இந்த கல்லூரி தொழில் நுட்ப பயிற்சியில் முதன்மை அடைந்தது. இந்த கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். இந்த கல்லூரி மூலம் வெளிநாட்டினருக்குப் பதிலாக இந்திய ராணுவத்தில் பல இந்தியர்கள் பணி புரிவார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.
வெகு நாட்களுக்குப் பிறகு அதாவது இந்த கல்லூரி தனது பொன் விழாவைக் கொண்டாடும் போது இந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்பட்ட செய்தி வந்தது. அவர் தனது 16 ஆம் வயதில் ஏரோநாட்டிகல் துறையில் சேர்ந்து
விமானப்படை விமானியாக விரும்பினார்.
ஆனால் பல காரணங்களினால் அவரால் இந்திய விமானப்படை விமானத்தை ஓட்ட முடியவில்லை. ஆனால் இதில் அதிசயம் என்ன வென்றால் அவர் குடியரசுத் தலைவராக ஆனதால் இந்திய ராணுவப் பிரிவுகளுக்குத் தலைவராகப்  பொறுப்பேற்றார். அவர் நமது புகழ்பெற்ற குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாம் ஆகும்.


அப்போது தான் சின்னசாமி ராஜமின் கனவு முழுமை அடைந்தது.

-வெங்கடேஷ்

கார்ட்டூன் கேலரி