ஏ கே செட்டியார் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

 

இந்தியாவில் காந்தியை யாரும் கோட்டுச் சூட்டு உடையுடன் பார்த்திருக்க மாட்டார்கள். அவர் அந்த உடையை அணிந்தார் என்றாலும் பலர் நம்ப மாட்டார்கள். ஆனால் கடந்த 1940 ஆம்
வருடம் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அதைக் கண்டிருக்கலாம்.

இளைய தலைமுறை புகைப்படக் கலைஞரான ஏ கே செட்டியார் கடந்த 1937 ஆம் வருடம் ஒரு கப்பலில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்ற பயணிகள் அன்று மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதை அவர்
கவனித்தார். ஒரு சரித்திரத்தை உண்டாக்கிய மகாத்மா காந்தியால் ஏ கே செட்டியாரும் கவரப்பட்டார்.

டோக்கியோவில் புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்ற செட்டியார் டாகுமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது சுதந்திரம் அடையும் முயற்சியில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த காந்தியைச் சுற்றி ஒவ்வொரு நிமிடமும் புகைப்படக்
கலைஞர்கள் குழுமி இருந்தனர். அவர்களுடன் போட்டியிட விரும்பாத செட்டியார் காந்தியின் பழைய திரைப்பட தொகுப்புக்களை எடுத்து தற்போதைய நிகழ்வுகளுடன் இணைக்க முடிவு செய்தார்.

பல்லாயிரக்கணக்கான மைல்கள் நான்கு கண்டங்களில் உலகப் போருக்கு இடையில் பயணம் செய்த செட்டியார் பல பழைய திரைப்பட சுருள்களைத் தேடிச் சேகரித்தார். அவர் பயணக்கப்பலில் பயணிக்கும் போது தனது சேகரிப்புக்களைச் சரக்கு கப்பலில் தனியாக அனுப்பி வைப்பார். போரில் குண்டு வெடிப்பில் கப்பல் தகர்க்கப்பட்டால் தமது
சேகரிப்புக்கு ஏதும் நேரக்கூடாது என்பதற்காக இந்தஏற்பாட்டைச் செய்திருந்தார்.

சுமார் 100 கலைஞர்கள் 30 வருடங்களில் எடுத்த 50000 அடி திரைப்படத்தைச் செட்டியார் சேகரித்தார். இதில் முதலில் அவருக்கு லண்டனில் கிடைத்த படத்தில் தென் ஆப்ரிக்காவில்
கோகலேவின் வரவேற்பு நிகழ்வில் காந்தி கோட்டுச் சூட்டு அணிந்திருக்கும் படம் கிடைத்தது.

அது மட்டுமின்றி காந்தியின் மகன் அவரது காலை பிடித்து விடுவது போன்ற பல அரிய காட்சிகளும் கிடைத்தன. செட்டியாரின் முக்கிய சேகரிப்பு காந்தி தண்டி யாத்திரை
மேற்கொண்டு உப்பு காய்ச்சியதாகும். இந்த காட்சிக்காக ஒரு தனியார் புகைப்பட கலைஞருக்குச் செட்டியார் ரூ. 1000 விலை அளித்துள்ளார்.

அத்துடன் அவர் திருப்பூரில் 2000 பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் காட்சியைப் படமாக்கினார். அதற்கு அந்த பெண்களுக்கு அவர் தனது சொந்தப் பணத்தில் ஒரு நாள்
ஊதியம் வழங்கியுள்ளார். அந்தக் காட்சியின் பின்னணியில் நாமக்கல் கவிஞர் எழுதிய “ஆடு ராட்டை” என்னும் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி டி கே பட்டம்மாளின் பாடலை உபயோகப்படுத்தினார்.

இந்த ஆவணப்படம் 1940 ஆம் வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் ஆரம்பக் காட்சிகளில் புத்தர் நினைவுச் சின்னங்கள் காட்டப்பட்டு காந்தியின் அகிம்சை
விளக்கப்பட்டது. இந்த படத்தில் தமிழ் அதன் பிறகு தெலுங்கு எனப் பல மொழிகளில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அப்போது வெளி வந்த மற்ற படங்களுக்கு இது போட்டியாக
இருந்தது.. ஆயினும் சில தினங்களில் அரசின் மிரட்டலுக்குப் பயந்து இந்த திரைப்படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

ஏழு வருடங்கள் கழித்து சுதந்திர தினத்தன்று மாலையில் இந்த திரைப்படம் இந்தி மொழியில் டில்லியில் திரையிடப்பட்டது. அதன் பிறகு ஏகே செட்டியார் இந்த படத்தை ஹாலிவுட்
ரசிகர்களுக்காக ஆங்கிலத்தில் மறு தொகுப்பு செய்து அமெரிக்காவில் 1953 ஆம் வருடம் வெளியிட்டார்.

இந்த ஆவணப்படம் எடுத்த அனுபவங்களை அவர் குமரி மலர் என்னும் பத்திரிகையில் ”அண்ணலின் அடிச்சுவட்டில்” என்னும் தொடர் மூலம் பகிர்ந்து கொண்டார். அது ஒன்று
மட்டுமே இந்த திரைப்படத்துக்கான ஒரே நினைவுச் சின்னமாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் சில பகுதிகள் அதிர்ஷ்டவசமாக மதுரையில் கிடைத்துள்ளன.

 

-வெங்கடேஷ்

கார்ட்டூன் கேலரி