ஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1900 களில், பிராமணர்கள் மட்டும் என்னும் பலகை குறிப்பாக மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உணவகங்களில் தென்படுவது வழக்கம். இதை எதிர்த்து 1914 ல் நடேச முதலியார் என்பவர் திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு ஒரு விடுதியைத் தொடங்கினார். அது விரைவில் பிராமணர் அல்லாத அனைத்து சமூகத்தினரையும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கும் குழுவாக ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் அமைப்பாக மாறியது. இந்த நிகழ்வின் மூலம் பிராமண சமூகத்தினர் தாம் மக்கள் தொகையில் வெறும் 3% இருந்த போதும், அதிகார வர்க்கத்தில் பெரும் பங்கு வகித்தது தெரியவந்தது.


நடேசனின் முயற்சியால் சர் பிடி தியாகராஜன் (அவர் பெயரால் பிறகு தி நகர் உருவாகியது) உள்ளிட்ட தலைவர்கள் தி சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேஷன் என்னும் கட்சியைத் தொடங்கினர். இந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்ப ஜஸ்டிஸ் எனும் பத்திரிகை தொடங்கப்பட்டதால் அந்த கட்சி ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கப்பட்டது.

பிராமணர் அல்லாத ஜமிந்தார்கள், நில உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் அக்கட்சியில் இணைந்தனர். அடுத்தடுத்து தலைவர்கள் உருவானதால் நடேசன் ஓரங்கட்டப்பட்டார். தற்போது தி நகரில் உள்ள நடேசன் பூங்கா அவர் நினைவாக நிறுவப்பட்ட ஒன்று. 1921 ல், தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி 65 இடங்களில் 15 மட்டுமே வென்றிருந்தது. இருப்பினும், அப்போதைய மதராஸ் கவர்னர் வில்லிங்க்டன் பிரபு மதராசில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியை அமைக்க முடிவு செய்தார். பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி அமைச்சர்களுக்கு மிகவும் உயர்ந்த அளவில் (ரூ.4333.60) மாத ஊதியம் வழங்கப்பட்டது.


பிராமண எதிர்ப்பை அனைத்து நடவடிக்கைகளிலும் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்துக்கும் இந்தியச் சுதந்திரத்துக்கு எதிராகப் பரப்புரை நடத்தி வந்தது. ஜஸ்டிஸ் கட்சி பல குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தங்களையும் செய்தது. சாதிவாரியான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இந்தக்கட்சி இயற்றியது. ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியில் சென்னை நிலப்பரப்பிலும் மாறுதல் உண்டானது. நகரில் நுங்கம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இடையிலான 6.4 கிமீ அளவுள்ள ஏரி மூடப்பட்டு தி நகர் ஆனது. இந்த பகுதிக்குத் தியாகராஜ செட்டியின் பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக மதராஸ் மாகாண அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அத்துடன் ஆயிரம் விளக்கு பகுதியிலிருந்த மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. கோவில் நிர்வாகங்களை அரசு தனது அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.


1937 வரை சுமார் 13 ஆண்டுகள் கட்சியிலிருந்த ஜஸ்டிஸ் கட்சியை ராஜாஜியின் தலைமையில் ஆன காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது. சீட்டுக் கட்டு மாளிகை போல் ஜஸ்டிஸ் கட்சி கலைந்து போனது. கட்சி தோல்வி அடையும் போது தலைவராக இருந்த பொப்பிலி ராஜா ஐரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றார். கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. பெரியார் ஜஸ்டிஸ் கட்சியில் பல மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கினார். அவர் கட்சியைத் தேர்தல் அரசியலிலிருந்து விடுவித்து திராவிட இயக்கமாக மாற்றினார். பல கோவில்களின் உரிமையாளர்களைக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி நாத்திக வழியில் செல்ல தொடங்கியது.

இதில் அதிருப்தி அடைந்த பல கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிய பிறகு கட்சிக்குத் திராவிடர் கழகம் என புதிய பெயர் சூட்டப்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி 1937 ஆம் வருடம் தோல்வி அடைந்த போது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, “ஜஸ்டிஸ் கட்சி 500 அடி ஆழக் குழியில் புதைக்கப்பட்டுள்ளது. இனி அது மீண்டு வராது” என விமர்சித்தார். சுமார் 30 வருடங்கள் கழித்து ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் வாரிசான திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றது. முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா இந்த கருத்தை நினைவு கூர்ந்து, “அன்று புதைத்தது சடலமல்ல. விதை” எனக் குறிப்பிட்டார்.

-வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.