கொச்சி:

கேரளாவை பயமுறுத்தி வரும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 47 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ரத்த பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கேரளாவை மிரட்டி வந்த நிபா வைரஸ், பின்னர் மாநில அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக அடியோடு ஒழிக்கப்பட்டது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமெரிக்ககாவில் பாராட்டு விழாவெல்லாம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக் கப்பட்ட நிலையில், அவரது ரத்த பரிசோதனையின்போது, அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. அந்த மாணவர் தற்போது எர்ணாகுளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து,  அந்த மாணவருடன் பழகியவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மருத்து பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களின்  ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேயில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுமார் 330 பேரின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்,  47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 47 பேரும் உடனடியாக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து மாநில சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.  கொச்சி மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி யாருக்கும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுகும்படி அறிவுறுத்தப்பட் டுள்ளனர். நிபா வைரஸ் பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ துறை அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.