நிரவ் மோடியின் வழக்கு கோப்புகள் தீயில் எரிந்தன

மும்பை

ங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13000 கோடி பண மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவர் உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் நாட்டை விட்டே ஓடி விட்டனர்.  தற்போது இங்கிலாந்து சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார். ஆண்டிகுவா நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்சி அங்கேயே தங்கி உள்ளார்.  இருவரையும் இந்தியா அழைத்து வர அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.

இவர்கள் இருவருடைய பொருளாதாரக் குற்றங்கள் தெற்கு மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.   இந்த அலுவலகக் கட்டிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீப்பிடித்தது.  இந்தத் தீ நான்காம் கட்டம் அளவுக்குச் சென்றுள்ளது.  மிகவும் பாடுபட்டு தீயை சனிக்கிழமை அன்று அணைத்துள்ளனர்.  ஆயினும் சூடு காரணமாகச் சனிக்கிழமை முழுவதும் அலுவலகம் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்துள்ளது.

இந்த தீ விபத்தில் வருமான வரித்துறையின் கடன் வசூல் தீர்ப்பாய அலுவலகம் முழுமையாக அழிந்துள்ளது.   இந்த பகுதியில் நேற்று மாலை தான் அதிகாரிகள் நுழைந்து சோதனை இட முடிந்துள்ளது.  அதிகாரிகள் தரப்பில் இந்த தீவிபத்தில் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புக்கள் மற்றும் எஸ்ஸார் குழும வழக்குகளின் கோப்புகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

எரிந்து போன கோப்புகள் அனைத்தும் பண மோசடி, திவால் குறித்த விசாரணை சம்பந்தப்படவை என்பதால் ஆர்வலர் அனில கல்கலி இது வேண்டுமென்றே ஏற்ப்டுத்தபபட்ட தீ விபத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.   இவர் இந்த வழக்குகள் குறித்து ஏற்கனவே பல முறை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பல ஆவணங்களைக் கேட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து வருமான வரி அதிகாரிகள், “எரிந்த கோப்புகளை மீண்டும் உருவாக்க நிறைய நாட்கள் தேவைப்படும்.   இந்த ஆவணங்களின் நகல்கள் அலுவலகத்தில் பல இடங்களில் இருக்கும்,  உடனடியாக அவற்றைத் தேடி மீண்டும் கோப்புகளை உருவாக்க நிறைய நாட்கள் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.