லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி, ‘கோல்டன் விசா’ என்றதொரு விசா வகையில், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த ‘கோல்டன் விசா’ என்பது ஐரோப்பிய யூனியனுக்கு வெளியிலுள்ள முதலீட்டாளர்களுக்காக வழங்கப்படுவதாகும்.

பிரிட்டன் அரசினுடைய பத்திரங்கள் அல்லது அரசு நிறுவனப் பங்குகளில் 2 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இந்த விசா வழங்கப்படுகிறது.

இந்த விசாவின் மூலம், ஒருவர், பணிபுரியலாம், படிக்கலாம் அல்லது தொழில் செய்யலாம். ஒருமுறை முதலீடு செய்யப்பட்ட அந்த 2 மில்லியன் பவுண்டு தொகை, 5ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது அவசியம்.

அதனடிப்படையில், சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும். இந்த விசாவுக்கான விண்ணப்பித்தலை, வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளலாம்.

நீரவ் மோடியின் இந்திய பாஸ்போர்ட் அடிப்படையில்தான் இந்த விசா வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், வங்கி மோசடி குற்றத்திற்காக, நீரவ் மோடி தலைமறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி