நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிப்பு ….

டெல்லி:

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 20ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

2012ல் மருத்துவ கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தொடர்ந்து, பல்வேறு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டு வந்ததால், அவர்கள் தூக்கில் போடுவது தாமதமாகி வந்தது.

ஏற்கனவே 3 முறை அவர்களை தூக்கிலேற்ற நீதிமன்றம் தேதி குறிப்பிட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தார். இதன் காரணமாக, குற்றவாளிகள் தூக்கில் ஏற்றப்படுவது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. பவன்குப்தாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சார்பில்  குடியரசு தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஆய்வு செய்த குடியரசு தலைவர், அதை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

இதையடுத்து, தற்போது குற்றவாளிகளுக்கு நான்காவது முறையாக வரும் 20ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி வரும் 20ந்தேதி  அதிகாலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டு உள்ளது.