டில்லி:

ந்தியாவையே அதிரச் செய்த டில்லி மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பலாத்கார மற்றும் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு  இன்று மே 5ஆம் தேதி (இன்று) வெளியாக இருக்கிறது.

டில்லியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வந்தார் மாணவி நிர்பயா. இவர் கடந்த 2012ம் வருடம்  டிசம்பர் மாதம் 16ம் தேதி, ஆறு பேர் கும்பல் நிர்பயாவை ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில்  பலாத்காரம் செய்து இரும்பு கம்பியால் கொடூரமாக சித்திரவதை செய்து வெளியே தூக்கி வீசியது.

படுகாயமடைந்த நிர்பயாவுக்கு டில்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு  மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி  2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நிர்பயா மரணமடைந்தார்.

இந்த வழக்கில், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இவர்களில்  முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். . 18 வயது இளம் குற்றவாளியான  சிறுவன் மூன்று வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, பிறகு விடுதலை ஆனார்.

மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்

இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (மே  5ஆம் தேதி)  பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் அளிக்க இருக்கிறார்கள்.