நிர்பயா வழக்கு: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி! தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி:

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4வது குற்றவாளியான அக்சய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, அவரின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டு கடுமையாக தாக்கப்பட்டர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொருவர்  இளம்வயது குற்றவாளி என்பதால், அவரை தவிர்த்து மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  முதல் 3 குற்றவாளிகள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.  அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4வது குற்றவாளியான அக்சய் குமார் தனியாக தூக்குத்தண்டனைக்கு தடை கோரி  மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போப்பண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்சய்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், நிர்பயா பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இந்த வழக்கில்,  அக்சய்குமார் அப்பாவி, அவர் அரசியல் காரணமாக தூக்கில் போடப்படுகிறார். ஊடகம், பொது மக்கள் மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக தூக்கில் போட நெருக்கடி கொடுக்கப்படுகிறது எனகூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷண், விசாரணை முடிந்த பின், தற்போது அதுபற்றி கூறுவது, ஆபத்தானது என்று கூறினார். பின்னர் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.  மறு சீராய்வு என்பது மீண்டும் விசாரிப்பது அல்ல. அரிதிலும் அரிதான மனுவாக இதனை கருத முடியாது என்றும், ஏற்கனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் விசாரிக்க முடியாது என்று  கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் உறுதி செய்தனர். தேவைப்பட்டால் 3 வாரத்திற்குள் ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பலாம் எனவும் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் அனைவரின் கருணை மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் ஏற்கனவே தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.