நிர்பயா கொலையாளிக்கு மனநிலை பாதிப்பு இல்லை : கொலையாளி மனு தள்ளுபடி

டில்லி

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை  பெற்று மன நிலை சரியில்லை எனச் சிகிச்சை கோரி மனு அளித்த கொலையாளி வினய் சர்மா மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறைவேற்ற ஏற்கனவே 2 முறை தேதிகள் குறிப்பிடப்பட்டது.   குற்றவாளிகள், மறுசீராய்வு மனு, கருணை மனு, கருணை மனு தள்ளுபடியை எதிர்த்து மனு எனப் பல விதங்களில் தண்டனையைத் தடுத்து வருகின்றனர்.

தற்போது வரும் மார்ச் மாதம் 3 ஆம் தேதி இவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.   இந்த 4 குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா திடீரென சிறை சுவற்றில் தலையை மோதி காயப்படுத்துக் கொண்டான்.   காயம் அடைந்தோரைத் தூக்கிட முடியாது என்பதற்காக இவன் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கேற்ப வினய் சர்மா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டில்லி நீதிமன்றத்தில் கடந்த 20 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவின் மீதான விசாரணை நடந்தது.  அப்போது குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறை அதிகாரி டில்லி நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணாவிடம் வாக்குமூலம் அளித்தார்.

அவர் தனது வாக்குமூலத்தில், “நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கும் தினமும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.  அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்.  மனோதத்துவ மருத்துவர் அவர்கள் யாருக்கும் மனநல பாதிப்பு இல்லை என உறுதி அளித்துள்ளார்.   அத்துடன் சிறையில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் இது நிரூபணம் ஆகி உள்ளது.” எனத் தெரிவித்தார்.

இந்த வாக்குமூலத்தை ஏற்ற நீதிபதி தர்மேந்திர ராணா  தனது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வினய் சர்மா சார்பில் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.   இதன் மூலம் வரும் 3 ஆம் தேதி கொலையாளிகளுக்குத் தூக்கு தண்டனை உறுதி ஆகி உள்ளது.