சுவரில் மோதி காயப்படுத்திக்கொண்ட நிர்பயா குற்றவாளி… திகாரில் பரபரப்பு

டெல்லி:

நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகளை தூக்கில்போட 3வது முறையாக புதிய தேதி குறிக்கப்பட்டு உள்ள நிலையில்,  குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா என்பவர், சுவரில் தலையைக்கொண்டு மோதி தன்னைத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

தூக்கில் போடுவதை நிறுத்தும் நோக்கில் அவர் தனது உடலை காயப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. வினய் சர்மாவின் செயலால் திகாரில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் 3வது முறையாக மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  வரும் மார்ச் 3-ம் தேதி இவர்களை தூக்கிலிட திகார் ஜெயிலுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளை திகார் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில், வினய் சர்மா என்ற நிர்பயா வழக்கு கைதி தான் அடைக்கப்பட்டுள்ள  சிறையில் உள்ள சுவரில் தனது தலையைக்கொண்ட மோதி காயத்தை உருவாக்கி உள்ளார்.

இதைக்கண்ட சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மருத்துவர் சோதித்து பார்த்தபோது, அவரது தலையில் சிறிய காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில்  வினய் சர்மா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  குற்றவாளிகள் 4 பேரும் 24 நேரமும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.