டில்லி

நிர்பயா கூட்டு பலாத்காரக் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.    அதன் பிறகு அவரை பேருந்தில் இருந்து பிடித்து தள்ளியதில் அவர் மரணம் அடைந்தார்.  நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் ஒருவர் வயது காரணமாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  ஒருவர் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.

மீதமுள்ள நால்வரான முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாக்குர் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த தூக்குத் தண்டனை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டது.  அதன் பிறகு இவர்களில் இருவர் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

அதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இவர்கள் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தூக்கிலிடப்பட இருந்தது.  அதன் பிறகு இதை எதிர்த்து மனு செய்யப்பட்டதை அடுத்து இந்த தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.   இந்த மனு நிராகரிக்கப்பட்டதால் ஜனவரி 17 ஆம் தேதி மற்றொரு தூக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நால்வரது மறு சீராய்வு மனுவும் 2017ல்  நிராகரிக்கப்பட்டது.  அதை எதிர்த்து முகேஷ் சிங், வினய் சர்மா, மற்றும் அக்சய் தாக்குர் ஆகிய மூவர் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதில் நான்காம் குற்றவாளியான பவன் குப்தா இதுவரை எதிர்ப்பு மனு தாக்கல் செய்யவில்லை.  அத்துடன் முகேஷ் சிங்  தனது கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து மனு அளித்து அதுவும் நிராகரிக்கப்பட்டது.

சிறை விதிகளின்படி ஒரு வழக்கில் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் ஒருவர் மேல் முறையீடு அல்லது மறு சீராய்வு மனு அளித்திருந்தாலும் யாருக்கும் தண்டனை விதிக்கக் கூடாது.  தற்போது டில்லி நீதிமன்றம் இந்த தண்டனை உத்தரவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.    எனவே இதை எதிர்த்து அரசு சார்பில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.

அத்துடன் இந்த குற்றவாளிகளில் அக்சய் தாக்குர் மற்றும் பவன் குப்தா ஆகிய இருவர் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அளிக்கவில்லை.  எனவே மீண்டும் தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இவர்கள் கருணை மனு அளித்தால் அந்த மனுவின் மீது முடிவு எடுக்கப்படும் வரை தண்டனையை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது.  இது தண்டனையை மேலும் தாமதப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.