தூக்கு தண்டனையை விரைவில் நிறைவேற்றுங்கள் : நிர்பயாவின் பெற்றோர் வேண்டுகோள்

டில்லி

நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெண் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.    அத்துடன் அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதால் மரணம் அடைந்தார்.   இதை ஒட்டி 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

மீதமுள்ள ஐவரில் ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் அவர் 3 ஆண்டு தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  மீதமுள்ள நால்வருக்கு டில்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.    உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

நிர்பயாவின் வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி தாம் இப்போது தான் மனநிம்மதி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.   அத்துடன் பல பெண்ணிய தலைவர்களும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் நிர்பயாவின் பெற்றோர், “இந்த தீர்ப்பு சற்றே தாமதமாக வந்தாலும் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது.    தூக்கு தண்டனை என்பது கொடுமை தான்.   ஆனால் அதை விட கொடுமை எங்கள் மகளுக்கு நிகழ்ந்துள்ளது.   நீதியை இன்னும் தாமதமாக்காமல் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.