விருதுநகர்:

ருப்புக்கோட்டை  கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியை  ஜெனிதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக நிர்மலா தேவி விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிர்மலா தேவியிடம் இன்று 5வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின்போது நிர்மலாதேவி கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் பலரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத் துறை தலைவர் நாகராஜன், மற்றும் கல்லூரி அலுவலர்களிம் விசாரணை நடத்தப்பட்டது. அதுபோல  மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.பி.ஏ. பிரிவின் பேராசிரியர் முருகனிடமும்  2வது நாளாக இன்றும்  விசாரணை தொர்ந்து வருகிறது.

இந்நிலையில் நிர்மலாதேவிக்கு பின்புலமாக செயல்பட்டு வந்த மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியின் போது நிர்மலாதேவியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த தூத்துக்குடி கல்லூரி உதவி பேராசிரியை ஜெனிதா தமிழ்மலரை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுபோன்ற பயிற்சிக்கு செல்லும்போதுதான் பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பேராசிரியைக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுபோன்று மதுரை பல்கலைக்கழகத்துக்கு  புத்தாக்க பயிற்சிக்கு சென்ற மற்ற கல்லூரி பேராசிரியை களும் பதற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.