பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி

ஸ்ரீவில்லிப்புத்தூர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டுள்ள  அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 5வது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர்  தனியார் கலை அறிவியல்  கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படித்து வரும்  மாணவிகளை பண ஆசைக்காட்டி,  தவறான  பாதைக்கு அழைப்பு விடுத்த போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் கவர்னர் அலுவலகம் உள்பட மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள், மற்றும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த விவகாரம் நிர்மலாதேவி  அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதேவேளையில், இந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் தனியாக  ஒரு குழுவை நியமித்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு  ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி சார்பில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. நிர்மலாதேவிக்கு ஜாமின் கொடுக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,  வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

நிர்மலாதேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே கடந்த 6ந்தேதி 4வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும்  5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதுபோல,  முருகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  ஜாமீன் மனு மீதான விசாரணை  26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.