டில்லி

திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் நேரடி ஒளிபரப்பை விளம்பரத்துக்காக இடையில்  நிறுத்திய தூர்தர்ஷன் நிர்வாகத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தியாகராஜ சாமிகள் 1767 ஆம் வருடம் பிறந்தவர்.  இவர் ராமர் மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார்.   இவருக்கு ராமர் தரிசனம் கொடுத்ததாகவும் கூறுவார்கள்.  இவர் திருவையாறில் 1847 ஆம் வருடம் மறைந்தார்.    இவருடைய சமாதி இங்கு உள்ளது.   இவர் மறைவை ஒட்டி திருவையாறில் வருடா வருடம் நடக்கும் தியாகராஜ ஆராதனை ஐந்து நாள் உற்சவம் ஆகும்.

இதில் இறுதி நாளான ஐந்தாம் நாள் புஷ்ய பகுள பஞ்சமி என கொண்டாடப்படுகிறது.      அன்றைய தினத்தன்று நாடெங்கும் உள்ள கர்னாடக இசை வித்வான்கள் ஒன்று கூடி தியாகராஜ சாமிகள் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனையை அவர் சமாதி முன்பு அமர்ந்து இசைப்பது வழக்கம்.    இதைக் காண பல லட்சக்கணக்கான சங்கீத ரசிகர்கள் கூடுவது வழக்கம்.

இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் ஒளீபரப்புவதாக அறிவித்திருந்தது.   அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில்  பாராட்டுக்கள் தெரிவித்திருந்தார்.   ஆனால் நிகழ்ச்சியின் இடையில் பஞ்ச ரத்ன கீர்த்தனையை வித்வான்கள் இசைக்கும் நேரத்தில் நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விட்டு விளம்பரங்கள் காட்டப்பட்டது.

இதற்கு நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “தூர்தர்ஷன்  நிர்வாகமே! உங்களால் பஞ்ச ரத்ன கீர்த்தனைகல் முடியும் வரை சில நிமிடங்கள் கூட பொறுக்க முடியாதா?  விளம்பரங்கள் தான் ஆராதனையை விட முக்கியமா?”  என பதிந்திருந்தார்.   அவருக்கு ஆதரவாக பல இசை ரசிகர்களும் கருத்து பதிந்தனர்.    இதற்கு பதிலாக தூர்தர்ஷன் அதிகாரி சசி சேகர், “இது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது மேடம்.    இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்துள்ளார்.