டில்லி

நேற்று நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை எடுத்துச் சென்ற சிவப்பு பை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீண்ட நெடுங்காலமாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஒரு தோல் பிரீஃப் கேசில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் சென்று தாக்கல் செய்வது வழக்கமாகும். இதற்கு முன்பு பாஜக ஆட்சி செய்த காலம் உள்ளிட்ட அனைத்து சமயங்களிலும் இது பின்பற்றப்பட்டு வந்தது. இம்முறை நிர்மலா சீதாராமன் இந்த பழக்கத்தை முதன் முறையாக மாற்றி இந்திய சின்னத்துடன் அமைக்கப்பட்ட ஒருசிவப்பு பையில் எடுத்து வந்தார்.

இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன், “நான் பிரிட்டனில் கன்சல்டண்டாக பணி புரியும் போது அந்நாட்டு பிரதமர் எலிசபெத் அரசியின் சின்னம் பொறிக்கப்பட்ட பையை எடுத்துச் செல்வதை கண்டுள்ளேன். எனக்கு அந்த நினைவுகள் என்றும் மறக்காது. அந்த அடிப்படையில் அதைப்போல் ஒரு பையை எடுத்துச் செல்ல நான் விரும்பினேன். ஆனால் எலிசபத் அரசியின் சின்னத்துடன் கூடிய பையை எடுத்துச் செல்ல நான் விரும்பவில்லை.

இது குறித்து நான் என் குடும்பத்தினருடன் பேசினேன். எனது மாமி இந்த பையை வடிவமைத்தார். எனது விருப்பப்படி அவர் இந்திய சின்னம் பொருந்திய பையாக வடிவமைத்தார். அவர் இந்த பையை மும்பையில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் மகாலட்சுமி கோயிலில் வைத்து பூஜித்து எனக்கு அளித்தார்.  நான் நிதிந்லை அறிக்கையை அளிக்கும் போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்து என் மாமி பார்த்துக் கொண்டிருந்தார்.” என தெரிவித்துள்ளார்.