புதுடெல்லி: வரும் 2019-2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதையடுத்து, ஜுன் 22ம் தேதி மத்திய நிதியமைச்சகம் சார்பில் ‘ஹல்வா திருவிழா’ நடத்தப்பட்டது.

பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கும் பணி துவங்குவதை குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக ‘ஹல்வா திருவிழா’ நடைபெறுவது வழக்கம். கடந்த 1940களில் இருந்தே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜுன் 22ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் கலந்துகொண்ட ஹல்வா திருவிழா மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்றது.

நிதியமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஹல்வா பரிமாறப்பட்டது. நிதியமைச்சகத்தின் கீழ்தளத்தில் இருக்கும் அச்சகத்தில், பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

இந்த ஹல்வா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதன் நோக்கமானது, அந்தக் குறிப்பிட்ட நாளிலிருந்து, நிதியமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் குடும்பத்தை மறந்து, முழு மூச்சாக பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்பதுதான்.