டில்லி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.  அவர் பொருளாதாரம் குறித்த பல கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.  தற்போது பொருளாதார மந்த நிலை குறித்துப் பல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்து வருகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை மறுத்து வருகிறார்.  இந்நிலையில் அவர் கணவர் ஒரு செய்தி ஊடகத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் பரகலா பிரபாகர், “தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது.   ஆனால் மத்திய பாஜக அரசு அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.   ஆயினும் இப்போது வெளியாகும் விவரங்கள் மூலம் மக்கள் அனைத்து துறைகளிலும் பொருளாதாரத் தேக்கம் உள்ளதைத் தெளிவாக அறிந்துக் கொண்டுள்ளனர்.  பாஜகவின் எதையும் மறுக்கும் மனப்பான்மை இங்கும் வெளிப்படுகிறது.

பாரதிய ஜனசங்கமாக இந்தக் கட்சி இருந்த காலத்தில் இருந்தே நேருவின் சோசலிச கொள்கைகளை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.   பாஜகவுக்குத் தெளிவான ஒரு பொருளாதாரக் கொள்கை என்றுமே இருந்தது இல்லை.   தனது கொள்கையாக இது இல்லை இது இல்லை எனச் சொல்லும் அக்கட்சி தனது கொள்கை எது என்பதை எப்போதுமே தெளிவாகச் சொன்னது இல்லை.

தற்போது நாட்டின் மிகப்பெரிய ஆளும் கட்சியாக இருந்தாலும், பல மாநிலங்களில் ஆட்சி செய்தாலும் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையால் அது வெற்றி பெறவில்லை.   தேர்தலில் பெற்ற வெற்றிக்கும் பொருளாதார கொள்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  அதை பாஜக உணரவும் இல்லை.

நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மனமின்றி தொடர்ந்து பாஜக விமர்சித்து வருகிறது.   அரசியல் கொள்கைகளை எதிர்ப்பது வேறு, பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பது வேறு என்பதைக் கட்சியின் அறிஞர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியைப் போல் முன்பு ஏற்பட்ட போது ராவ் மற்றும் மன்மோகன் சிங் எடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக முன்வர வேண்டும்.  தற்போது நீரில் மூழ்கும் கப்பலைப் போல் உள்ள இந்தியப் பொருளாதார நிலையைச் சீர் செய்ய மோடிக்கு இதுவே சரியான வழியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.