அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன தெரியுமா?

டில்லி

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமனின் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஆவார்கள்

கணவருடன் அமைச்சர் நிர்ம்லா சீதாராமன்

கடந்த வாரம் மக்களவையில் ராகுல் காந்தியின் ரஃபேல் குறித்த கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கும் போது ராகுல் காந்தி குறித்து விமர்சித்தார்.   நிர்மலா சீதாராமன் அப்போது ராகுல் ஒரு பாரம்பரியமான அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர் எனவும்  தாமும் பிரதமரும் அரசியல் பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதை ஒட்டி ஊடகங்களில் நிர்மலா சீதாராமனை பெரிதும் புகழ்ந்து பாஜக ஆதரவாளர்கள்  பதிவுகளை பதிந்தனர்.   ஆயினும் ஒரு சிலர் மட்டும்  அரசியல் பின்னணி அதிகம் இல்லாத ஒரு தென்னிந்திய பெண்மணியான நிர்மலா சீதாராமன் அரசியலில் முன்னேறி உள்ளதைக் கண்டு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி நிர்மலா சீதாராமனின் தந்தை சீதாராமன் ஒர் ரெயிவே பணியாளர் என்பது உண்மை எனினும் அவருடைய புகுந்த வீட்டினர் அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.    அவருடைய குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்த ஒருவர், “நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் காங்கிரசில் இருந்த போது இரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

அப்போது அவர்கள் குடும்பம் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் மிகவும் நட்பில் இருந்தது.  அதன் பிறகு பிரபாகர் பாஜகவில் இணைந்து நரசப்பூர் மக்களவை தொகுதியில் இருந்து 1998 ஆம் வருட தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.   கடந்த 2008 ஆ,ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியில் இணைந்த பிரபாகர் அங்கிருந்தும் விலகினார்.

அதன் பிறகு அவர் சந்திரபாபு வின் அரசில் அமைச்சர் அந்தஸ்து உள்ள பதவியில் இருந்தார்.   பாஜக கூட்டணியில் இருந்து  தெலுங்கு தேசம் கட்சி விலகிய போது அவரும் அந்த பதவியில் இருந்து விலகினார்.   அதற்கு அவர் தனது மனைவி பாஜக அமைச்சராக உள்ளதால் அவருக்கு ஏதும் பிரச்சினைகள் வரக்கூடாது என விலகியதாக தெரிவித்தார்.

அத்துடன் நிர்மலா சீதாராமனின் மாமனார் பரகலா சேஷவதாரம் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசில் அமைச்சராக பல முறை பதவி வகித்துள்ளார்.  அது மட்டுமின்றி நிர்மலாவின் மாமியார் காளிகாம்பா என்பவரும் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில சட்டப்பேரவை  உறுப்பினராக இருந்தவர் ஆவார்.” என தெரிவித்துள்ளார்.