மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை முடிந்து விட்டதாகவும், வருகிற 15-ந் தேதிக்குள் கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், கவர்னர் நியமனம் செய்த விசாரணை அதிகாரி  சந்தானம் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், சென்னை கவர்னர் மாளிகை மற்றும் மதுரை பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை செய்ய கவர்னர் தனியாக விசாரணை கமிஷன் நியமித்தார். மேலும், தமிழக அரசு சார்பில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நலையில், கவர்னரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானமும் மதுரையில் முகாமிட்டு விசாரணை தொடங்கினார். தொடர்ந்து அருப்புக்கோட்டை கல்லூரி, புகார் அளித்த மாணவிகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பதிவாளர் என 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், நேற்று விசாரணை முடிந்து  இரவு  மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் விசாரணை அதிகாரி சந்தானம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நிர்மலாதேவி விவகாரம் குறித்த விசாரணை முடிந்து விட்டது. இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறேன். அவர்கள் அளித்த தகவல்களையும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு சில ஆவணங்கள் தமிழில் இருக்கின்றன. அதனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக நான் கூடுதல் அவகாசம் கேட்க மாட்டேன்.

மே 15-ந் தேதிக்குள் இதுதொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கவர்னரிடம் தாக்கல் செய்வேன்.

இவ்வாறு  அவர் கூறினார்.