நிர்மலாதேவி விவகாரம்: கருப்பசாமிக்கு 4 நாட்கள் சிபிசிஐடி காவல்!

சாத்தூர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலாதேவிக்கு, மூளையாக இருந்து செயல்பட்டு வந்த முன்னாள் மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நேற்று நீதிமன்றத்தில் சரணமடைந்தார்.

இந்நிலையில், அவரை 10 நாள் போலீஸ் காவல் கேட்டு சிபிசிஐடி போலீசார் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி,  4 நாள் சிபிசிஐடி காவலுக்கு அனுமதி அளித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணை யில், நிர்மலாதேவிக்கு பின்புலமாக,  துணை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் இருந்தது தெரிய வந்தது.

இதை  அறிந்த இருவரும் திடீரென தலைமறைவாகினர். இந்நிலையில், முருகன் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தினுள் உள்ளார். இந்நிலையில் தலைமறைவான கருப்பசாமியை கைது செய்ய சிபிசிஐடிபோலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று  , மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அதைத்தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதாக சிபிசிஐடி போலீசார் 10 நாட்கள் போலீஸ் காவல் கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.