மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தேவைப்பட்டால் கூடுதல் அவகாசம் கோரப்படும் என்று கவர்னர் நியமித்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மற்றும் புகார் கூறிய மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வரும் சந்தானம், நேற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியிடம் விசாரணை மேற்கொண்டார்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் நிர்மலாதேவி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக கூறிய சந்தானம், தகவல் அடிப்படையில் மீண்டும் தேவாங்கர் கல்லூரி செயலாளர் மற்றும் சிலருடன் விசாரணை நடத்தப்படும் என்றும், பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், விசாரணை கால வரம்பு நீட்டிக்க கோரிக்கை வைக்கப்படும் என்றும், தேவையானால் மட்டுமே அவகாசம் கோரப்படும் என்றும் சந்தானம் தெரிவித்தார்.