நிர்மலாதேவி வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
விருதுநகர்:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய மூவரும் தனித்தனியே வாதிட ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படித்து வரும், மாணவிகளை தவறான வழிக்கு அழைப்பு விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில், நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்தாக பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் விருதுநகர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பேராசிரியர் நிர்மலா தேவி , முருகன் , கருப்புசாமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் வழக்கை தனித்தனியாக எதிர்கொள்ள முன்வந்ததால், வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. மேலும், சிபிசிஐடி காவல்துறையினர், செப்டம்பர் 10ம் தேதிக்குள் இறுதி குற்றப் பத்திரிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றம்,செப்டம்பர் 24 ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.