விருதுநகர்:

ல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை கல்லூரி ஆசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய 5 நாள் போலீஸ் காவல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிர்மலா தேவியின் போலீஸ் காவல் மேலும் சில நாட்கள் நீட்டிக்க கோரி சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்ததாக ஆடியோ  வெளியானதன்பேரில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழகம், கவர்னர் மாளிகை வட்டாரம் வரை தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகை தனியாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. அதுபோல தமிழக அரசும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த வேண்டிய சிபிசிஐடி சாத்தூர் நீதி மன்றத்தில் கடந்த 20ந்தேதி மனு தாக்கல் செய்தது. அதையடுத்து  5 நாள் போலீஸ் காவல் கொடுத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று 5வது நாளாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  நிர்மலாதேவியை விசாரிக்க நீதிமன்றம் அளித்த போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிவடைவதால், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

அப்போது இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால், நிர்மலாதேவியின் போலீஸ் காவலை மேலும் சில நாட்கள் நீட்டிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.