புதுடெல்லி:

ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தது தேர்தல் நன்னடத்தை விதி மீறிய செயல் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் விமர்சித்தார்.

அரசு பொறுப்பில் இருக்கும் ராஜீவ் குமார் ஒரு தலைபட்சமாக கருத்து கூறியது தேர்தல் நன்னடத்தை விதி மீறல் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்பட்டது.

இந்த புகார் குறித்து நிதி அயோக் துணை தலைவர் ராஜீவ் குமாரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது.

அவரும் விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை. ஒரு சார்பு கருத்து தெரிவித்ததன் மூலம் தேர்தல் நன்னடத்தை விதியை மீறியுள்ளீர்கள்.

இது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.