நாக்பூர்

சிறுநீரை விலைக்கு வாங்கி உரம் தயாரிக்கலாம் என அரசுக்கு  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை கூறி உள்ளார்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது அவர் உர இறக்குமதிக்காக அதிக அளவில் பணம் செலவழிவதாகவும் அதை குறைக்க தாம் ஒரு யோசனை அரசுக்கு அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

அந்த சந்திப்பில் நிதின் கட்காரி,  “ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் சேகரிக்கும் வங்கி அமைத்து அதன் மூலம் உரம் தயாரிக்கலாம்.  அந்த உரத்தை விவசாயிகளுக்கு வழங்கி உர இறக்குமதிச் செலவை குறைக்கலாம்.   இந்த  யோசனையை அரசுக்கு தெரிவித்துள்ளேன்.  இது தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.   மனிதர்களின் சிறுநீரில் உள்ள ஏராளமான நைட்ரஜன் வீணாகிறது.   அதை இந்த திட்டத்தின் மூலம் லாபமாக்கலாம்.

ஒவ்வொரு விவசாயிக்கும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களை அரசு வழங்க வேண்டும்.   அதில் சேகரிக்கப்படும் சிறுநீரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 என விலை கொடுத்து அரசு வாங்க வேண்டும்.  இதில் கிராமப்புறங்களில் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.  அங்கு தான் சிறுநீர் தண்ணீருடன் கலந்து கழிப்பறைக்கு செல்வது இல்லை.  அதானல் அந்த சிறுநீரை இயற்கை உரமாக மாற்கலாம்.   இது குறித்து முழுமையாக இப்போது சொல்வதற்கு இல்லை.  நாக்பூரில் எனது வீட்டருகே உள்ள ஆய்வகத்தில் இதற்கான சோதனை நடைபெற்று வருகிறது.   அது முடிந்ததும் முழுமையான தகவல்களை அளிக்கிறேன்” என தெரிவித்தார்.