பாட்னா

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர் முன்னே பார்தியை மிரட்டி சிலர் ஜெய்ஸ்ரீராம் என சொல்ல வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

என் டி டி வி யின் செய்தியாளர் முன்னே பார்தி,  இவர் சமீபத்தில் காரில் தன் மனைவி, 91 வயதான தந்தை, 84 வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் சமஸ்டிபூர் அருகே பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு லாரியில் வந்த ஒரு கும்பல் அவர் காரை வழி மறித்தது.  அவர் வண்டியை திருப்பிச் செல்ல முயன்ற போது லாரியில் இருந்து நான்கைந்து பேர் இறங்கி, அவர் காரை நிறுத்தினர்.

அவர்கள் கழுத்தில் காவி நிற துண்டை சுற்றி இருந்தனர்.  காரின் உள்ளே எட்டிப் பார்த்தனர்.  முன்னே மற்றும் அவரின் தந்தையார் தாடி வைத்திருந்ததும் முன்னேவின் மனைவியின் பர்தாவும் அவரை இஸ்லாமியர் என இனம் காட்டியது.  அவர்கள் கையில் வைத்திருந்த தடிகளால் தரையில் ஓங்கி தட்டியவாறு,  காரில் உள்ளவர்களை ஜெய்ஸ்ரீராம் என குரல் கொடுக்கச் சொன்னார்கள்.   அவர்களும் உயிருக்கு பயந்து குரல் கொடுக்க, வந்தவர்கள் வழியை விட்டனர்.

பாட்னா வந்த, முன்னே, தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை பதிந்து, தாம் எந்த மதத்துக்கும் விரோதி இல்லை எனவும், ராம நாமத்தை சொல்ல விருப்பமில்லாதவனும் இல்லை எனவும்,  கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தது தவறு எனவும் குறிப்பிட்டார்.   அதை முதல்வர் மற்றும் பலருக்கு டாக் செய்தார்.

அவருடைய இந்த டிவிட்டர் செய்தியை படித்த நிதிஷ் குமார், இந்தச் செயலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பசுமாட்டுக்காக மக்களைக் கொல்வதை பிரதமரும், குடியரசுத்தலைவரும் வன்மையாக கண்டித்தது தெரிந்ததே.