தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு!

பாட்னா:  பீஹார் மாநில முதல்வர், நிதிஷ்குமார் மத்திய அரசின்  தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, பீஹாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் கட்சியான, ஐக்கிய ஜனதா தளம், பாராளுமன்றத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது. ‘இந்த சட்டம் தங்களுக்கு எதிரானது என, சிறுபான்மையினர் அஞ்ச வேண்டாம்’ எனவும் நேற்று முன்தினம் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,’குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து, அமலுக்கு வர உள்ள, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் ஆதரிப்பீர்களா’ என, செய்தியாளர்கள் நிதிஷ்குமாரிடம் கேட்டனர். அதற்கு, ”தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை, பீஹாரில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்,” என, அவர் திருப்பிக் கேட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில், பீஹார் தான், முதன்முதலாக, இத்திட்டம் தேவையில்லை என, தெரிவித்துள்ளது. சமீபத்தில், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியோர், 2024க்குள் வெளியேற்றப்படுவர்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் இத்திட்டத்திற்கு, கூட்டணி கட்சியே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, பா.ஜ.,வுக்கு கவலை அளித்துள்ளது. ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக்கும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தபோதிலும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.