இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்து வரும் சுவாமி நித்தியானந்தா, கைலாசா என்ற ஒரு தீவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதை தனி நாடாக அறிவித்துள்ளதாகவும், அதற்கான பணம் மற்றும் அனைத்து வகையான சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியதுடன், அதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோ போன்றவை  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்,  கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் தனது நாட்டு வர விரும்புபவர்களை இலவசமாக அழைத்துச்செல்வதாக அறிவித்ததுடன், வருபவர்கள், ஆஸ்திரேலியா வந்தால்,  அங்கிருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும்,  கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில்,   இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் கடந்த 19ம் தேதியிட்டு வெளியான அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என  குறிப்பிடப்பட்டிருக்கிறது.