நித்தியானந்தா வெளிநாடு தப்பி சென்றுவிட்டார்! மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தகவல்

சென்னை:

குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா,  நேபாளம் வழியாக  வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்து உள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், அவர் மத்திய அமெரிக்காவின் பெலிஸ் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பாஸ்போர்ட் ஏற்கனவே காலாவதி ஆன நிலையில், அதை புதுப்பிக்க மத்தியஅரசு மறுத்துவிட்ட நிலையில், வேறு நாட்டின் பாஸ்போர்ட் வாயிலாக அவர் வெளிநாடு தப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்னார்குடி ஜீயர், நித்தியானந்தா  நேபாளம் வழியாக ஏற்கனவே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்து உள்ளார். நித்தியானந்தா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ராமானுஜ ஜீயர் ஏற்கனவே இந்துமதம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,  கமல்ஹாசன் ஒரு தேசத் துரோகி,  கமலஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது. அவருக்கு அந்தத் தீவிரவாத அமைப்பு நிதி அளித்து வருகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.