சென்னை:

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டு சென்றார்.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி, இன்று நிதி ஆயோக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்திருத்திருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி  அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க  மேற்குவங்க முதல்வர் மம்தா மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில் மற்ற மாநில முதல்வர்கள் பங்கு கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் நேற்று இரவு விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். டெல்லியில் முதல்வரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் நாட்டில் நிலவும் வறட்சி நிலை, விவசாயிகள் பிரச்சினை, எல்லையில் நிலவி வரும் பாது காப்பு பிரச்சினை, நக்சல் பாதிப்பு மாவட்டங்களில் நிலவி வரும் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றதும் திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  நிதி ஆயோக்கின் முதலாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் 2015ம் ஆண்டு பிப்ரவரி 8ந்தேதி  நடத்தப்பட்டது.

2வது நிதி ஆயோக்  கூட்டம் ஜூலை 15, 2015-ல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் களை இணைத்து மூன்று துணை நிலை குழுக்களும், இரண்டு செயல் படுத்துதல் குழுக்களும் உருவாக் கப்பட்டன.

3வது நிதி ஆயோக் கூட்டம் 2017ம் ஆண்டு  ஏப்ரல் 23ந்தேதி நடைபெற்றது. இதில்,பொதுத் தேர்தலையும், சட்டப் பேரவைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தவும், நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றவும் முடிவு செய்யப் பட்டது.

4வது நிதி ஆயோக் கூட்டம்  2018ம் ஆண்டு ஜூன் 17ந்தேதி நடைபெற்றது. இதில், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அரசின் பிரதான திட்டங்களின் செயல்பாடு களை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று 5வது நிதிஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில்  எதிர்கால வளர்ச்சி முன்னுரிமைகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை  குறித்து  விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி முதல்வர் பழனிசாமி  நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து  கூட்ட முடிவில், பிரதமரை சந்தித்து தமிழகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்