குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 7800 கிமீ தூரத்துக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்: நிதி ஆயோக் திட்டம்!

டில்லி:

நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில், நாடு முழுவதும் கடற்கரை யோரங்களில் சுமார் 7800 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்,  கடற்கரை ஓரங்களில் சுமார் 7800 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் நிறுவப்படும் என்றும், அங்கிருந்து குழாய்கள் மூலம் அருகிலுள்ள நகர்ப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும், இதற்கான திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருவதாகவும் நிதி ஆயோக் அறிவித்து உள்ளது.

குறிப்பாக சென்னை உள்பட மிகவும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நகர மக்களின் தண்ணீர்   தேவைகயை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,  மத்திய அரசு அறிவித்துள்ளபடி வரும் 2024ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் முயற்சியாக இந்த திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

வணிக ரீதியாக சாத்தியமான ஆலைகளை அமைக்க பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தக் கூடிய பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றிய விரிவான திட்டத்தை ஆயோக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இதற்கான முயற்சிகளை மத்தியஅரசு புதிதாக உருவாக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகம்  எடுத்து வருவதாகவும், இந்த ஆலைகளுக்கான செலவு பகுப்பாய்வு மற்றும் திட்ட நம்பகத்தன்மை குறித்து ஆய்வு  அறிக்கையை வழங்கும் என்றும் நிதிஆயோக் தெரிவித்து உள்ளது.