டில்லி

டந்த 2019ஆம் வருடம் அதானி நிறுவனத்துக்கு ஆறு விமான நிலையப் பணிகளுக்கான ஒப்பந்தம் அளித்தமைக்கு நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் அதிக அளவில் பயணிகள் வந்து போகும் 7  விமான நிலையங்கள் உள்ளன.  இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களிலும் இணைந்து மொத்தம் 34.10 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.  இவற்றில் மும்பையில் மட்டும் கடந்த 2019-20 ஆம் வருடம் 7.9 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

இவற்றைத் தவிர முந்திரா விமான நிலையம் 2018 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானங்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.   இந்த அனைத்து விமான நிலையப் பணிகளையும் கவனிக்க அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்துக்கு நவி மும்பை பசுமை விமான நிலைய பணி ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.

கடந்த 2018 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றைத் தனியார் மயமாக்க கோரி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன.  இந்த முக்கியமான விமான தளங்கள் அனைத்தும் நாட்டின் முதலீடுகளில் ஒன்று என கருதப்படுவதால் ஒரே நிறுவனத்துக்கு 6 விமான நிலையங்களின் பணிகளை ஒப்பந்தம் அளிப்பது தவறென நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை எச்சரித்துள்ளது.

இந்த ஒப்பந்தப் புள்ளி வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஏற்கனவே டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு முன்பு ஒப்பந்தப் புள்ளி அளித்திட போது ஒரே நிறுவனத்துக்கு அளிக்கப்படவில்லை.  அப்போது டில்லி மின் விநியோக திட்டத்துக்கு ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்யாமல் இரு நிறுவனங்களுக்கு பணிகள் பகிர்ந்ததை அரசு சுட்டிக் காட்டி இருந்தது.

ஆனால் 2018 ஆம், ஆண்டின் ஒப்பந்தப்புள்ளி குறித்த விவாதத்தின் போது பொருளாதார விவ்காரத்துறையி எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.   அதே தினத்தன்று நிதி ஆயோக் இந்த விமான நிலையப்பணி ஒப்பந்தப் புள்ளி குறித்து  இதே ஆட்சேபத்தை தெரிவித்திருந்தது.  ஆனால் அதை அரசின் ஆலோசகர்கள் ஒரு நிறுவனத்தால் அனைத்து விமான நிலையங்களையும் கவனிக்கும் திறன் இருந்தால் இந்த ஆட்சேபத்தை கருத்தில்கொள்ள வேண்டாம் எனக் கூறி உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த  நிதி அமைச்சக செயலர் கர்க் கடந்த 2019 ஆம் வருடம் ஜூலை மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார்..    அதன் பிறகு அதானி நிறுவனத்துக்கு இந்த விமான நிலையப் பணிகள் அளிக்கப்பட்டன.  2020 ஆம் ஆண்டு பிப்ரவிர் மாதம் அதானி நிறுவனத்துக்கு அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலைய பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அதன் பிறகு மேலும் விமான நிலையங்கள் ஒவ்வொன்றாக அதானி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளன,

இந்த ஒப்பந்தப் புள்ளிகளை அதானி குழுமம், ஜிஎம்ஆர் குழுமம், ஜூரிச் விமான நிலையம், கொச்சின் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட 6 பேர் அளித்துள்ளனர்.  இவர்கள் அனைவரின் ஒப்பந்தப் புள்ளிகளின் அடிப்படையில் அதானிக்கு 6 விமான நிலையங்களின் பணிகளை 50 வருடங்கள் நடத்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.   இதற்கு முன்பு டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார் மயமாக்கியபோது அந்த பணிகளுக்கான அதிகபட்ச கால கட்டமாக 30 வருடங்கள் மட்டுமே இருந்துள்ளன.  அத்துடன் இந்திய விமான நிலைய நிறுவனத்துக்கு இந்த இரு விமான நிலையங்களிலும் 26% பங்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு விமான நிலையப்பணிகளை ஏற்றுக் கொண்டுள்ள அதானி நிறுவனத்துக்கும் மத்திய விமானத்துறை அமைச்சகம் ஆகிய இரு தரப்பில் இருந்தும் இந்த எதிர்ப்பு குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.  இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு  அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக மேலும் மூன்று விமான நிலையப் பணிகளை அதானி நிறுவனம் ஏற்காமல் உள்ளது.  இதற்குப் பண இழப்பு ஏற்படலாம் எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரிகளை மாற்றம் செய்வது தற்போது இயலாத செயல் என அதானி நிறுவனம் காரணம் கூறி உள்ளது.