டில்லி

நிதி அயோக் (பிளானிங் கமிஷன்) உப தலைவர் அரவிந்த் பங்காரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அவர் மீண்டும் கல்வித்துறையில் பணியாற்றப்போவதாக தெரிவித்தார்.

நிதி ஆயோக் என்னும் திட்டக்கமிஷனின் உப தலைவராக உள்ளவர் அரவிந்த் பங்காரியா.  இவர் புகழ்பெற்ற வணிகப் பொருளாதார நிபுணரான ஜகதீஷ் பகவதியுடன் பணி புரிந்தவர்.  இதற்கு முன் ஆசிய டெவலப்மெண்ட் வங்கியின் முன்னணி பொருளாதார வல்லுனராகவும், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்தவர்.

இவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.  ஆகஸ்ட் 31 தேதி வரை தான் பணி புரியப்போவதாகவும், அதற்குப் பின் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்லப் போவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே பணிபுரிந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தனது கல்விப் பணியைத் தொடங்குவார் என அவரை சார்ந்தவர்கள் குறிப்பிடுள்ளனர்.

அரவிந்த் பங்காரியா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  உலக வங்கி, இண்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட், உலக தொழில் மையம், யுனைடெட் நேஷன் கான்ஃபரன்ஸ் ஆன் டிரேட் அண்ட் டெவலப்மெண்ட் ஆகியவற்றிலும் முக்கியபதவிகள் பல வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.