மீண்டும் பாஜக தலைமையை தாக்கும் நிதின் கட்கரி

டில்லி

பாஜகவின் தோல்விகளுக்கு தலைவர்களே காரணம் என மீண்டும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து 3 மாநிலங்களில் ஆட்சியை காங்கிரசிடம் இழந்தது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் விவசாய பிரிவு தலைவர் வரும் பொதுத் தேர்தலில் மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பாஜக முன் நிறுத்த வேண்டும் எனக் கூறியதில் சர்ச்சை ஏற்பட்டது. நிதின் கட்கரி தாம் தலைமை ஏற்க விரும்பவில்லை எனக் கூறி அப்போதைக்கு சர்ச்சையை முடித்து வைத்தார்.

சில தினங்களுக்கு முன்பு நிதின் கட்கரி புனே நகரில் ஒரு நிகழ்வில் தேர்தல் தோல்விகளுக்கு கட்சி தலைமை பொறுப்பேற்க வேண்டும் என பேசியது அடுத்த சர்ச்சையை உண்டாக்கியது. இதன் மூலம் கட்சித் தலைமைக்கும் நிதின் கட்கரிக்கும் இடையில் உள்ள பனிப்போர் வெளியே தெரிய வந்தது. பாஜகவினரிடையே மட்டும் இன்றி அரசியல் நோக்கர்கள் இடையேயும் இது பரபரப்பை உண்டாக்கியது.

நேற்று டில்லி விஞ்ஞான பவனில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். அப்போது நிதின் கட்கரி மீண்டும் பாஜக தலைமையை தாக்கி உள்ளார். நிதின் கட்கரி, “எந்த ஒரு தோல்வி மற்றும் திறமையின்மைக்கு முக்கிய காரணம் கட்சி தலைமை தான். நான் கட்சித் தலைவராக இருந்து எனது கட்சி சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரிவர செயல்பட வில்லை என்றால் நான் தானே பொறுப்பு? . ஒரு சில மாநிலங்களில் உள்ளூர் தலைவர்கள் சரிவர திட்டங்களை நிறைவேற்றாததும் தோல்விக்கு காரணம்” என பேசி உள்ளார்.