மாசு கட்டுபாடுக்கு எதிராக அமைச்சர் கட்காரியிடம் புதிய கொள்கைகள் உள்ளன: நீதிமன்றம் வந்து தெரிவிக்க ஆணை

டெல்லி: மாசுக்கட்டுப்பாடு குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கட்காரியிடம் புதிய கொள்கைகள் உள்ளன, அவற்றை நீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.

மின்னணு கார்கள் உற்பத்தி விவகாரத்தில் அரசின் கொள்கை என்ன என்பது பற்றிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு சில கருத்துகளை முன் வைத்துள்ளது.

நீதிமன்றம் கூறி இருப்பதாவது: மாசை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் கட்கரியிடம் புதுவிதமான கொள்கைகள் உள்ளன. அவர் நீதிமன்றத்திற்கு வந்து, அதனை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். முடிவு எடுக்கும் இடத்தில் அவர் உள்ளார் என தெரிவித்தனர்.

அதற்கு அரசு தரப்பில் ஆட்சேபிக்கப்பட்டது. அவர் நீதிமன்றம் வந்தால் அது அரசியல் ரீதியில் பார்க்கப்படும் என்று கூறப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், அவருக்கு சம்மன் அனுப்புவதாக நினைக்க வேண்டாம்.

இது வேண்டுகோள். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ள ஒருவர் தேவை. அவர் வர முடியுமா என்பதை பார்க்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், பட்டாசு மற்றும் பயிர் கழிவுகளை எரிப்பதால், ஏற்படும் மாசுபாடு, குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும்.

ஆனால், வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசு கவலைக்குரியது. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சுற்றுச்சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் டெல்லிக்கு மட்டும் பாதிப்பு இல்லை. நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும் என்று கூறியதுடன், மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: nitin gadkari, Pollution problem, supreme court, உச்ச நீதிமன்றம், நிதின் கட்கரி, மாசுக்கட்டுப்பாடு
-=-