40 வருடங்கள் கடனை திருப்பி செலுத்திய மல்லையாவை மோசடியாளர் என்பதா ? நிதின் கட்கரி

மும்பை

விஜய் மல்லையா 40 வருடங்களாக கடனை திருப்பி செலுத்தி வந்ததால் அவரை மோசடிக்காரர் என்பது தவறு என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறி உள்ளார்.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பித் தராத தொழிலதிபர் விஜய் மல்லையா நடவடிக்கைகளுக்கு பயந்து லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை திரும்ப கொண்டு வர இந்தியா லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இங்குள்ள சிறைகளில் வசதிக் குறைவு என விஜய் மல்லையா சார்பில் வாதிடப்பட்டது. அதை ஒட்டி விஜய் மல்லையாவை அடைக்க உள்ள சிறையின் புகைப்படங்களும் வீடியோவும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

லண்டன் நீதிமன்றம் அந்நாட்டு உள்துறைக்கு விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதி அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து இந்திய மக்கள் தங்கள்மகிழ்ச்சியை தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது டிவிட்டரில், “இது இந்தியாவுக்கு மிகப் பெரிய தினமாகும். இந்தியாவை ஏமாற்றி விட்டு யரும் இங்கிருந்து ஓடி ஒளிய முடியாது. ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆதரவளித்த குற்றவாளியை தேசிய ஜனநாயக முன்னணி திரும்ப கொண்டு வந்துள்ளது” என தெரிவித்தார்.

இதே போல விஜய் மல்லையா திரும்பி வருவது பாஜகவின் வெற்றி எனவும் மோடியின் சாதனை எனவும் அமித்ஷா, ஸ்ம்ரிதி இரானி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் குறை ஏதும் கூறவில்லை. ஆனால் பாஜக அமைச்சர் ஒருவர் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று மும்பையில் ஒரு நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “எனக்கும் விஜய் மல்லையாவுக்கும் இடையில் எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் விஜய் மல்லையா 40 வருடங்களாக தான் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தி வருகிறார். அவர் விமானத்துறையில் இறங்கி அதனால் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டார். அதற்காக அவரை திருடன் என்பதா? ஒரு முறை கடனை திருப்பி தாராததால் அவர் மோசடிக்காரரா? 40 வருடங்களாக் கடனை திருப்பி செலுத்தியவரை மோசடியாளர் என்பது சரி அல்ல.”என தெரிவித்துள்ளார்