புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைத் துறைக்கான தலைமை அலுவலகத்தை கட்டுவதில் ஏற்பட்ட மோசமான தாமதத்திற்கு, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள மத்திய நெஞ்சாலைத் துறைக்கான தலைமை அலுவலகத்தை ஆன்லைன் முறையில் திறந்துவ‍ைத்தார் அமைச்சர் நிதின் கட்கரி.
இந்தக் கட்டடம் ரூ.250 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக யோசனை கடந்த 2008ம் ஆண்டு உருவானது. அதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு இதற்கான டெண்டர் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், இந்தப் பணி நிறைவடைவதற்கு 9 ஆண்டுகாலம் என்ற பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டடப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மொத்தம் 7 சேர்மன்கள் மாறியதோடு, 2 அரசுகளும் மாறிவிட்டன. அவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது இந்த விஷயத்தில்..!
எனவே, இந்த விஷயத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி. “7 சேர்மன்கள் மாறி, 8வது சேர்மனின் காலத்தில்தான் இந்தக் கட்டடப் பணி முடிவடைந்துள்ளது. இந்த உலகமகா தாமதம் குறித்து ஒரு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
இந்த தாமதத்திற்கு பின்னால் உள்ள சேர்மன்கள் மற்றும் பொது மேலாளர்களின் புகைப்படங்கள் புதிய கட்டடத்தில் மாட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் அமைச்சர்.