பாட்னா :
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்- அமைச்சருமான நிதீஷ்குமார், இந்த பட்டியலை வெளியிட்டார். பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி. கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் சம்மந்தியான சந்திரிகா ராய்க்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார், நிதீஷ்குமார்.

6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்திரிகா ராய், ஆர்.ஜே.டி. கட்சியில் தான் இருந்தார். இவரது மகள் ஐஸ்வர்யா ராயை, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமணம் செய்துள்ளார். ஆனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதோடு, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
லாலு குடும்பத்தினர், தனது மகள் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையோடு, விளையாடியதாக கடும் கோபத்தில் இருந்த சந்திரிகா ராய், கடந்த மாதம் தான், ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். இப்போது அவர், தனது சொந்த தொகுதியான பர்சா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பீகார் மாநில காவல்துறை இயக்குநர் பதவியில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்று, ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த குப்தேஷ்வர் பாண்டேக்கு டிக்கெட் அளிக்கப்படவில்லை. பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுடன் வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் பாண்டே நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
– பா.பாரதி